அதிமுக முன்னாள் அமைச்சர் கைது

தமிழக வேளாண்துறை பொறியியலாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

பிற்பகலில் கைதான அவர், திருநெல்வேலியில் நீதிபதி முன்பாக ஆஜர் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தத் தற்கொலைக்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

வேளாண் பொறியியல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அமைச்சர் தரப்பு அளித்த அழுத்தமே இதற்குக் காரணம் என்றும், அமைச்சரின் உதவியாளர்கள் அவரை தொடர்ந்து தொலைபேசியில் அழைத்துத் தொந்தரவு செய்தனர் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அமைச்சரை பதவி நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, அவரது அமைச்சர் பதவி மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகளை பறிக்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.