"பணத்திற்காக பழங்குடியினர் மரம் வெட்டச் செல்கின்றனர்"

பிடிபட்ட செம்மரக் கட்டைகள்
Image caption பிடிபட்ட செம்மரக் கட்டைகள்

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டப்போனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகிறது. இருந்தும் வேறு வேலை ஏதும் செய்ய முடியாத சூழலில் இருக்கும் பழங்குடியினரும், மலைப் பகுதிகள் அருகே வசிக்கும் ஏழை மக்களும் இத்தொழிலுக்குச் செல்வது தொடர்வதாக மலைவாழ் மக்களுக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சட்டவிரோத வேலைக்கான ஆட்பிடிப்பு எப்படி நடக்கிறது என்று பிபிசி தமிழோசையிடம் விளக்கிய தர்மபுரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில் ராஜா, பல கிரமங்களிலிருந்தும் கூலித் தொழிலாளர்கள் அழைத்துவரப்படுவதாகவும், ஒரு கிலோ செம்மரக் கட்டையை காட்டில் இருந்து வெட்டி அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து கொடுத்தால் ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் வரை கூலி தரப்படுவதாகவும் தெரிவித்தார். மூன்று மாதகாலம் மரம் வெட்டும் வேலை செய்யும் ஒருவரால் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்க முடியும் என்ற நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சேஷசைலம் மலைப் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மரம்வெட்டும் கும்பலினால் கல்லால் அடித்து கொல்லப்பட்ட பிறகு அங்கே காவல்துறையின் கெடுபிடி அதிகமானது. திருப்பதியை ஒட்டிய பகுதிகளில் கடந்த ஜீன் மாதத்தில் அடுத்தடுத்து நடந்த இரு மோதல்களில் 7 பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

கோடிக்கணக்கான ரூபாய் பணம் புழங்கும் இந்த சட்டவிரோதத்தொழிலில் கீழ்மட்டத்தில் இருப்போரே தண்டிக்கப்படுவதாகக் கூறுகிறரார் திருவண்ணாமலை போளூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பி சேகர். அரசு அதிகாரிகள் பல மட்டங்களில் உதவி செய்யாமல் துறைமுகம் வழியாக செம்மரங்களைக் கடத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரகசியம்

கடந்த ஜூன் மாதம் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உண்மைகளை கண்டறியும் பணியில் ஐதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னாள் குற்றப்பரம்பரையினர் மற்றும் பழங்குடிகள் ஆய்வு மையம் ஈடுபட்டது. வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட அந்த மையத்தின் கள ஆய்வில் பங்குபெற்ற சென்னையைச் சேர்ந்த வழங்கறிஞர் முனுசாமி, இந்த குற்றத்தை செய்வோர் வலுவான கட்டமைப்பை வைத்துள்ளதாகவும், மிகவும் ரகசியமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து தாம் சுயாதீனமாக ஆராய முற்பட்டபோது, கிராமப் பகுதிகளில் வாழும் பலர் தம்மிடம் பேசவே தயங்கியதாகவும், தம்மிடம் பேசியவர்களும் முழு உண்மையை கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் வனப்பகுதியில் நடைபெற்றுள்ள நிலையில் அங்கே எந்த சூழலில் துப்பாக்கிச் சூடு நடந்தது என்பதை உறுதியாக கண்டறிவது கடினம் என்கிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன். வீரப்பன் வேட்டையின்போது காவல்துறையினர் செய்த அத்துமீறல்களை சதாசிவா ஆணையம் ஒரளவுக்கு வெளிக்கொண்டு வந்தும் தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய அவர், சட்டமும், சமூக மனநிலையும் ஆயுதங்களைக் கையாள சாதகமாக உள்ளது என்கிறார்.

காட்டில் இருக்கும் வரை தேக்கு, சந்தனமரம், செம்மரம், யானைத் தந்தம் போன்றவைகளுக்கு பெரிய மதிப்பு இல்லை என்றும் இவை அனைத்தும் சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும்போதுதான் அதற்கு கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதாகவும் செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த கடத்தல் வலைப்பின்னல் அமைப்பில் காலாட்ப்டைகளாக செயற்படும் கூலித்தொழிலாளிகள் மட்டுமே இதுவரை தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள் என்று கூறும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இந்த வலையமைப்பின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவதே இல்லை என்கிற விமர்சனத்தையும் முன்வைக்கிறார்கள்.