சத்யம் வழக்கு: 'ராமலிங்க ராஜு உள்ளிட்ட 10 பேரும் குற்றவாளிகள்'

இந்தியாவின் மிகப் பெரிய, நிறுவன முறைகேடு வழக்குகளில் ஒன்றான சத்யம் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption 2009ஆம் ஆண்டில் ராமலிங்க ராஜு எழுதிய ஒரு கடித்தையடுத்து இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.

இவர்களுக்கான தண்டனை இன்று மதியம் அறிவிக்கப்படும் என இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.வி.எல்.என். சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களின் ஒன்றாக விளங்கிய சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு, அவரது சகோதரரும் அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனருமான பி. ராம ராஜு, முன்னாள் தலைமை நிதி அதிகாரி வத்லானி ஸ்ரீநிவாஸ், வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் தணிக்கையாளர்கள் சுப்ரமணி கோபாலகிருஷ்ணன், டி. ஸ்ரீநிவாஸ், ராமலிங்க ராஜுவின் மற்றொரு சகோதரர் பி சூரிய நாராயண ராஜு, அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் ஜி. ராமகிருஷ்ணா, டி. வேங்கடபதி ராஜு, ஸ்ரீசைலம், தணிக்கையாளர் பிரபாகர் குப்தா ஆகியோர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

சத்யம் நிறுவனத்தின் கணக்குகளில் முறைகேடு செய்து, நிறுவனத்தின் லாபத்தை உயர்த்திக்காட்டியதாக 2009ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி அந்நிறுவனத்தின் நிறுவனரும் அப்போதைய தலைவருமான பி ராமலிங்கராஜு ஒரு கடிதத்தின் மூலம் ஒப்புக்கொண்டதையடுத்து இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.

இதையடுத்து, இந்தியப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. சத்யம் நிறுவனப் பங்குகளும் கடுமையாக வீழ்ந்தன. ஒட்டுமொத்தமாக 14,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டது.

இதற்குப் பிறகு ராமலிங்க ராஜு கைதுசெய்யப்பட்டார். ஆந்திர குற்றப் புலனாய்வுத் துறையிடமிருந்து 2009 பிப்ரவரியில் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இந்த முறைகேட்டின் மூலம் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டியது.