இந்தோனேஷியா: எட்டுபேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்; ஒருவருக்கு ஒத்திவைப்பு

இவர்களை மன்னிக்கும்படி இறுதிவரை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன படத்தின் காப்புரிமை AP
Image caption இவர்களை மன்னிக்கும்படி இறுதிவரை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன

இந்தோனேஷிய நீதிமன்றத்தால் போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எட்டுபேரின் மரணதண்டனையும் செவ்வாய்க்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும்படி சர்வதேச அளவில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, மத்திய ஜாவா தீவில் இருக்கும் சிறைக்குள் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பிறகு (புதன்கிழமை துவங்கிய சமயம்) இவர்களின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இவர்களுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது நபரான பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த மேரி ஜேன் வெலொசோ என்கிற பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

போதைமருந்தை கடத்துவதற்கான கருவியாக மேரி ஜேன் வெலொசோவை தான் பணியில் அமர்த்தியதாக கூறி பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்நிலையத்தில் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, மேரிக்கான மரணதண்டனை நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட எட்டு ஆண்கள் ஆஸ்திரேலியா, பிரேசில், நைஜீரியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள்.

தனது குடிமக்களான இருவர் மரணதண்டனையில் கொல்லப்பட்டால் அதற்கான எதிர்வினைகளுக்கு இந்தோனேஷியா முகம் கொடுக்கவேண்டி வரும் என்று ஆஸ்திரேலியா எச்சரித்திருந்தது. ஆனால் குற்றவாளிகளை தண்டித்து தடுப்பதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாக இந்தோனேஷியா தெரிவித்திருக்கிறது.