பிரபல சித்திரக் கலைஞர் கோபுலு மரணம்

தமிழ்நாட்டின் பிரபல கேலிச் சித்திரக் கலைஞரான கோபுலு என்ற எஸ். கோபாலன் இன்று காலமானார். அவருக்கு வயது 92.

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இதழ்களில் ஓவியங்களை வரைந்துவந்தார் கோபுலு.
படக்குறிப்பு,

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இதழ்களில் ஓவியங்களை வரைந்துவந்தார் கோபுலு.

1924ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த கோபுலு, சித்திரக் கலையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்றார்.

ஆனந்த விகடனில் பணியாற்றிய மாலியை தன் மானசீக குருவாக ஏற்றக்கொண்ட கோபுலு, 1945ல் விகடனில் பணியில் சேர்ந்தார்.

கோபாலன் என்ற பெயரை மாலிதான் கோபுலு என்று மாற்றினார்.

தேவனின் கதைகள், கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், சாவியின் வாஷிங்டனில் திருமணம் உள்ளிட்ட படைப்புகளுக்கு கோபுலு வரைந்த ஓவியங்கள் அழியாப் புகழைப் பெற்றவை.

படக்குறிப்பு,

சாவியின் வாஷிங்டனில் திருமணம் தொடருக்கு கேலிச் சித்திர பாணியில் கோபுலு வரைந்த ஓவியங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தவிர, நகைச்சுவைத் துணுக்குகள், கேலிச்சித்திரங்கள், புராணத் தொடர்களுக்கான ஓவியங்கள் என 60 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளுக்கு ஓவியங்களை வரைந்துள்ளார் கோபுலு.

படக்குறிப்பு,

கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் தொடருக்கு கோபுலுவின் ஓவியங்கள் அணிசேர்த்தன.

1963ல் இதழியல் துறையிலிருந்து விலகி, விளம்பரத் துறையில் இணைந்து பணியாற்றிவந்தார். தமிழகத்தின் சில முக்கியமான நிறுவனங்களின் முத்திரைகளை இவர்தான் வடிவமைத்தார்.

சிறிதுகாலம் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்த கோபுலு, புதன்கிழமையன்று சென்னையில் காலமானார்.