அருங்காட்சியக உயர் பதவிக்கு தமிழ் மொழியறிவு தகுதி : பாஜக உறுப்பினர் வலியுறுத்தல்

  • 13 மே 2015
படத்தின் காப்புரிமை ASI
Image caption தொல்லியல் துறையில் மொழிப் பிரச்சனை

தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநர் பதவிக்கான தேர்வு தகுதிப் பட்டியலில், தமிழ் மொழியையும் இணைக்க கூறி, பாஜகவின் மாநிலங்களை உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை பேசிய தருண் விஜய், மொழித் தகுதி தேவையுடைய உயரிய பதவிகளில், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

தமிழ் மொழிக்கு நாட்டில் செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு கூட 150 ஆண்டுகள் போராடிய பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டில் அது பெறப்பட்டது என்றார். அத்தோடு அம்மொழிக்கான அங்கீகாரம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்போது தருண் விஜய் குறிப்பிட்டார்.

குறிப்பாக தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநர் பதவிக்கான தகுதி மொழியறிவு பட்டியலில், சம்ஸ்கிருதம், பிராகித், பாலி, அரபிக், பாரசீகம் மற்றும் செம்மொழிகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதே சமயம் இந்த பட்டியலில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் மொழி விடுபட்டுள்ளது தவறு என்றும் அவர் கூறினார்.

இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மொழிகளின் எழுத்து வடிவங்கள், பண்டைய தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திலிருந்து உருவானது என்பதற்கான ஆதாரங்கள், தமிழகத்தின் நெல்லை அருகே ஆதிச்சநல்லூரில் கடந்த 2004 ஆம் ஆண்டில் ஒரு தாழியில் இருந்து கிடைக்கப்பெற்றன என்றும் தருண் விஜய் அப்போது குறிப்பிட்டார். ஆனால் அவை தொடர்பான ஆய்வறிக்கையை,11 ஆண்டுகளுக்கு பிறகும் கூட இந்திய தொல்லியல்துறை முழுமைப்படுத்தாமல் உள்ளது என்றார்.

இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள, அந்த எழுத்து வடிவம் அடங்கிய தாழி, மைசூர் தொல்லியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது ஆனால், அவை வசதியாக தொலைது போகச் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்தத் தாழி தொலைந்து போனது குறித்து உடனடியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற அவரது கோரிக்கையையும் முன்வைத்தார்.