தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா பதவியேற்றார்

தமிழகத்தின் முதலமைச்சராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption தமிழக முதலமைச்சராக, ஜெயலலிதாவுக்கு ஆளுனர் ரோசைய்யா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

தமிழக ஆளுனர் ரோசைய்யா முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

காலை சரியாகப் 11 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா, விழா அரங்கிற்கு வந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆளுனர் ரோசைய்யா அரங்கிற்கு வந்தார்.

அதற்குப் பின் ஜெயலலிதாவுக்கு ஆளுனர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவியேற்காமல் குழுவாகப் பதவியேற்றனர். முதலில் 14 பேரும் பிறகு 14 பேருமாக இரு குழுக்களாக அமைச்சர்கள் ஒரே சமயத்தில் பதவியேற்றனர்.

இதையடுத்து, அனைவரும் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் விழா நிறைவுற்றது.

பதினொரு மணிக்குத் துவங்கிய விழா, 26 நிமிடங்களில் நிறைவுக்கு வந்தது.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption முன்னெப்போதும் இல்லாதவகையில் ஒரே நேரத்தில் 14 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்தப் பதவியேற்பு விழாவில் பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, இல. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு உள்ளிட்ட சினிமா பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், சரத்குமார்.

இந்த விழாவிற்கு வருகைதரும் ஜெயலலிதாவை வரவேற்பதற்காக காலையிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போயஸ் தோட்டத்திலிருந்து விழா நடக்கும் அரங்கம் வரை சாலையோரங்களில் நின்றிருந்தனர்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption பொன். ராதாகிருஷ்ணன் (நடுவில்) உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

சாலைகள் நெடுக்க ஜெயலலிதாவை வாழ்த்தி வரவேற்புப் பதாகைகளும் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.

போக்குவரத்து நெரிசல்

இந்த நிகழ்வை ஒட்டி, போக்குவரத்தில் பெரும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, சென்னையின் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பதவியேற்பு விழா முடிந்த பிறகு கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலை வழியாக தொண்டர்கள் வெள்ளத்தின் நடுவில் ஜெயலலிதா வீடுதிரும்பினார்.