ஆந்திர என்கவுன்டர்: சி.பி.ஐ விசாரணைக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை

ஆந்திர மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இருபது தமிழர்களின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசுக்கும் ஆந்திர மாநில அரசுக்கும் கூறியிருப்பதாக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் முருகேசன் தெரிவித்திருக்கிறார்.

Image caption செம்மரக் கடத்தல்காரர்கள் மீது தற்காப்புக்காக சுட்டதாக ஆந்திர காவல்துறை கூறுவதை மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்கவில்லை.

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தச் சென்றார்கள் என்று கூறப்பட்டு, செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஆந்திரப்பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் முருகேசன், சிபியை விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசிடமும் ஆந்திரப் பிரதேச அரசிடமும் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ஐந்து லட்ச ரூபாயை அளிக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

தாங்கள் இது தொடர்பாக, பல விவரங்களைக் கேட்டும் ஆந்திர அரசு அதனைத் தரவில்லை என்றும் இதனால், ஆந்திர மாநில காவல்துறை தலைவரும் தலைமைச் செயலரும் மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் முருகேசன் கூறினார்.

இந்த வழக்கில் சாட்சியளித்தவர்களுக்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பை அளிக்க வேண்டுமென்றும் முருகேசன் கேட்டுக்கொண்டார்.

செம்மரக் கடத்தல்காரர்கள் தங்களைத் தாக்கவந்ததால், தாங்கள் பாதுகாப்புக்காக சுட்டதாகவே ஆந்திர காவல்துறை தெரிவித்துவருகிறது. மனித உரிமைக் குழுக்கள் இதனை ஏற்க மறுத்துவருகின்றன.