ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஓம் என்று சொல்லாமல் யோகாவும் சூரியநமஸ்காரமும் சாத்தியமா?

இந்திய மத்திய அரசில் ஆட்சியில் இருக்கும் பாஜக, தான் ஆளும் சில மாநிலங்களில் பள்ளிக்கூடங்களில் யோகா உடற்பயிற்சிகளை கட்டாயமாக்க முயல்வதாக செய்திகள் வெளியானது. பிறகு அந்த செய்திகளை மறுத்த பாஜக, யோகா பயிற்சி பள்ளிகளில் கட்டாயமாக்க முயலவில்லை என்று விளக்கமளித்திருந்தது.

அதேசமயம், இந்தியப் பள்ளிகளில் கட்டாயமாக யோகா பயிற்சிகள் என்கிற செய்தி மதசிறுபான்மையினர் மத்தியில் கவலையையும் விமர்சனங்களையும் தோற்றுவித்தது. குறிப்பாக யோகாபயிற்சியின் ஒரு பகுதியான சூரியநமஸ்காரம் என்பது இஸ்லாமிய மதநம்பிக்கைகளுக்கு எதிரானது என்கிற கவலை குறித்து விசாரிக்கப் போவதாக இஸ்லாமிய தனிநபர் சட்டவாரியம் அறிவித்திருக்கிறது.

இந்த பின்னணியில் யோகா பயிற்சியில், இந்த சூரிய நமஸ்காரம் என்பது என்ன? ஓம் என்கிற இந்துமதத்துடன் தொடர்புடைய மந்திரச்சொல் இல்லாத யோகாவும், சூரியநமஸ்காரமும் சாத்தியமா? இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினர், வெளிநாட்டவர் மற்றும் நாத்திகர்கள் யோகாபயிற்சிகளை மேற்கொள்ளும்போது இந்த பிரச்சனை எப்படி கையாளப்படுகிறது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சென்னையிலுள்ள யோகா பயிற்சி ஆசிரியரும், யோகா ஆய்வாளருமான சி அண்ணாமலை.