ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீடுகள் ஏற்பு

ஊழல் வழக்கில் தண்டிப்பட்டதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு பின்னர் முதல்வரானார் படத்தின் காப்புரிமை Other
Image caption ஊழல் வழக்கில் தண்டிப்பட்டதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு பின்னர் முதல்வரானார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள், மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்துத் தீர்ப்பு வழங்கியிருந்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தது. ஆனால், அந்த மனுவில் ஒரு சில தவறுகள் உள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததாகவும் அதை சரிசெய்ய அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் தற்போது கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, அதற்கான பதிவு எண்ணையும் வழங்கியுள்ளது. இதனால் இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடத்தப்படும்.

திமுகவின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவும் இந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வ‌ழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவரது நெருங்கிய தோழி சசிகலா, அவர் உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆனால், கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது.

அதேசமயம் கர்நாடக அரசின் சட்டத்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட கர்நாடக அமைச்சரவை, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஜூன் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்படுவார் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.