ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மதுரைக்கு அருகில் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய வணிக நகரம்

  • 18 ஜூலை 2015

தமிழ்நாட்டில் மதுரை நகருக்கு சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் வைகை நதியின் தென்கரையில் இந்திய அகழ்வாராய்ச்சித் துறை மேற்கொண்ட ஒரு ஆய்வில், 2,200 ஆண்டுகள் பழமையான சங்க கால நகரம் அங்கு இருந்திருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை ASI
Image caption கீழடி பகுதியில் பல பழங்காலப் பொருட்கள் கிடைத்ததையடுத்து இங்கு ஆய்வு மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது.

மதுரை பகுதியில், குறிப்பாக வைகைக் கரையில் இம்மாதிரியான அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது இதுவே முதல் முறையென இந்த ஆய்வை மேற்கொண்ட இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அரிக்கமோடு, காவிரிபூம்பட்டிணம் உள்ளிட்ட நகரங்களில் கிடைத்தைப்போல சங்க கட்டங்கள் இங்கும் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை ASI
Image caption இங்கு ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்திருப்பதால், இது ஒரு வணிக நகரமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ரோமானிய மட்பாண்டங்கள், பழங்காலப் பொருட்கள் ஆகியவை இங்கு கிடைத்திருப்பதால், இந்தப் பகுதி ஒரு வணிக நகரமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இங்கு கிடைத்த பொருட்கள் இன்னும் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்றாலும், மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த நகர நாகரீகம் இங்கு இருந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் துவங்கிய இந்த அகழ்வாராய்ச்சி, இன்னும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக அகழ்வாராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.