மதுவிலக்குக் கோரிவந்த சசிபெருமாள் போராட்டத்தின் போது மரணம்

தமிழ்நாட்டில் மதுக் கடைகளை மூட வேண்டுமென நீண்ட காலமாகப் போராடி வந்த சசிபெருமாள், இன்று உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்கான ஒரு போராட்டத்தின்போதே அவர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரள எல்லையில் உண்ணாமலைக் கடை என்ற இடத்தில் பல மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன.

இந்த மதுக்கடைகளை மூட வேண்டுமெனக் கோரி அந்த ஊராட்சியின் தலைவர் ஜெயசீலன் என்பவர் தீக்குளிக்கும் போராட்டத்தை இன்று அறிவித்திருந்தார். இந்தப் போராட்டத்தில் சசிபெருமாளும் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டிருந்தது.

இன்று காலை 8 மணியளவில் மண்ணெண்ணைய், தீப்பந்தத்துடன் உண்ணாமலைக் கடையில் உள்ள செல் போன் கோபுரத்திற்கு அருகில் வந்த இருவரும் அந்த கோபுரத்தின் மீது ஏறினர்.

இதன் பிறகு, அந்த இடத்திற்கு வந்த காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அவரை கீழே இறங்கிவருமாறு கூறினர். ஆனால், மதுக்கடைகள் மூடப்படும் என எழுத்து மூலமாக உறுதி அளித்தால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் என சசிபெருமாள் கூறினார்.

ஜெயசீலன் மட்டும் கீழே இறங்கிவந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சசிபெருமாளையும் கீழே அழைத்துவர, இரண்டு பேர் மேல் சென்று பார்த்தபோது அவர் அங்கே சுய நினைவின்றி இருந்தார்.

பிறகு, காவல்துறையினர் அவரைக் கீழே இறக்கிவந்தனர். அவரைச் சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

60 வயதாகும் சசிபெருமாள் நீண்ட நாட்களாக தமிழகத்தில் மதுவிலக்குக் கோரி போராட்டங்களை நடத்திவருகிறார்.

2013ஆம் ஆண்டில், மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சசி பெருமாளின் மறைவுகுறித்து தே.மு.தி.க., பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை இரங்கல் தெரிவித்துள்ளன.