14 வருட பழைய வழக்கில் விரைவில் இறுதி விசாரணை

  • 14 ஆகஸ்ட் 2015

2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நான்கு தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, உச்சநீதிமன்றத்தில் அடுத்த மாதம் 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை விரைவில் முடிக்க கோரப்பட்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக ஒரே நேரத்தில் நான்கு தொகுதிகளில் மனு தாக்கல் செய்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட இந்த வழக்குதான், தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தபோதும் அவருக்கு டான்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், சட்டப்படி அவர் தேர்தலில் போட்டியிட தகுதி இழந்திருந்தார். தவிர, நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததால், ஜெயலலிதாவின் அனைத்து மனுக்களுமே அப்போது தள்ளுபடி செய்யப்பட்டன.

ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது தொடர்பான புகார் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், திமுக சார்பில் மறைந்த முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதனடிப்படையில், ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.

அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

2012ஆம் ஆண்டில் குப்புசாமி இறந்ததை அடுத்து, அந்த வழக்கில் குப்புசாமிக்கு பதிலாக தன்னை மனுதாரராக ஏற்றுக்கொள்ளுமாறு திமுகவின் நாடளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.எஸ். விஜயன் நீதிமன்றத்தை கோரினார். ஆனால் அந்த மனுவை அப்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அதன் காரணமாக அந்த மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டுமென, ஏ.கே.எஸ். விஜயன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இன்று ஏ.கே.எஸ். விஜயன் தரப்பில் வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா ஆஜராகி வாதாடியபோது, இந்த குறிப்பிட்ட வழக்கை விரைவாக முடிக்கக்கோரி வலியுறுத்தினார். அத்தோடு நீதிமன்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட காரணத்தால், இருமுறை ஜெயலலிதா பதவி இழந்தார் என்பதையும் மனதில் கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.