அதிகரிக்கும் பதின்பருவத் தற்கொலைகள் - இந்தியாவுக்கு முதலிடம்

" தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று நினைப்பதோ அல்லது தற்கொலை செய்து கொள்வதோ குற்றம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது குற்றமல்ல" என்கிறார் பல முறை தற்கொலை செய்துகொள்ள முயன்ற 20 வயதான லாரன் பால்.

ஆறு முறை அவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார். மிகச்சமீபத்தில் 2014ல். "இது என் குடும்பத்துக்கு பெரும் மனக்கஷ்டத்தைத் தந்தது என்று எனக்குத் தெரியும்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

கேபி டிக்ஸ்ஸின் ஒரே மகள் , இஸ்ஸி, அவரது டீன் ஏஜில் ( பதின் பருவத்தில்) பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தார். " ஆனால் தற்கொலை என்ற எண்ணம் அவளுக்கு இருந்ததில்லை என்று தான் கருதியதாக கேபி டிக்ஸ் கூறினார்.

ஆனால் இரண்டாண்டுகளுக்கு முன் அவரது அந்தப் பதினான்கு வயது மகள் தற்கொலை செய்துகொண்டாள். "இதை என்னால் மறக்கவே முடியாது " என்கிறார் டிக்ஸ்.

பல சமூகங்கள் இப்போதுதான் இந்த மனநலப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றன. வேறு பல சமூகங்கள் இதை விவாதிப்பதேயில்லை. இதனிடையே பொதுச் சுகாதார வல்லுநர்கள் மன நலப் பிரச்சனைகளில் ஒரு குறிப்பான பிரச்சனையை -- அதாவது பதின்பருவத்தினர் தற்கொலையை சமாளிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இது ஒரு வேகமாகப் பரவும் வியாதி போல் கருதப்படுகிறது.

மிக நீண்ட காலமாக மனத் தடைகளால் இந்தப் பிரச்சனை மூடி மறைக்கப்பட்டிருந்தது என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

படத்தின் காப்புரிமை DIX FAMILY
Image caption தற்கொலை செய்து கொண்ட 14 வயது இஸ்ஸி டிக்ஸ்

இணையத்தில் அச்சுறுத்துவது, அல்லது மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் ஊடகங்களில் பிரசுரமாவது போன்ற சில சமீபத்திய சமூகப் போக்குகள் இந்த அதிகம் பேசப்படாத பிரச்சனை மீது ஒரு தாக்கம் செலுத்தி மேலும் அதிக இளம் உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கியிருக்கின்றன.

"தற்கொலை என்பது ஒரு சிக்கலான பிரச்சனை, ஏன் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளவேண்டுமென்று முடிவெடுக்கிறார் என்பதற்கு ஒரே ஒரு காரணம் இருக்காது. மேலும் இந்த பதின்பருவத் தற்கொலை என்ற விஷயம் சரியாக ஆராய்ச்சி செய்யப்பட்டு புரிந்துகொள்ளப்படவில்லை" ,என்கிறார் தற்கொலைத் தடுப்பு விஷயத்தில் கவனம் செலுத்தி இயங்கும், 'சமாரிட்டன்ஸ்' என்ற பிரிட்டிஷ் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரூத் சூதர்லாந்த்.

என்ன தெரிந்திருக்கிறது என்றால், உலகச் சுகாதார நிறுவனத் தகவல்கள்படி, உலக அளவில் ஆண்டொன்றுக்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதில் ஒவ்வொரு தற்கொலை சம்பவத்துக்கும், குறைந்தது 20 தற்கொலை முயற்சி தோல்வி சம்பவங்களும் இருக்கின்றன.

பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் தற்கொலை செய்துகொள்ளக்கூடியவர்கள். இருப்பினும் சில நாடுகளில் இளைஞர்கள் தற்கொலை என்பது மிக அதிகமாகக் காணப்படுகிறது. உலகெங்கிலும் சில நாடுகளீல் 15லிருந்து 29 வயதான இளைஞர்கள் மத்தியில் தற்கொலைதான் அவர்கள் இறப்பதில் இரண்டாவது பெரிய காரணியாக இருக்கிறது.

சாலை விபத்துக்கு அடுத்தபடி தற்கொலைதான் இந்த வயதுக்குட்பட்ட குழுவினரில் அதிக இறப்புகளுக்குக் காரணம், இதில் பாலின வேறுபாடுகளைப் பார்த்தால், இதுதான் 15லிருந்து 29வரை உள்ள பெண்கள் இறப்பதற்கு முதல் காரணமாக இருக்கிறது, என்கிறார் உலகச் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் அலெக்ஸாண்ட்ரா ஃப்ளெய்ச்மான்.

உலகப் புள்ளிவிவரம்

803,900

பேர் ஆண்டொன்றுக்கு தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதாவது 40 விநாடிக்கு ஒரு தற்கொலை

 • 15வது முன்னோடி காரணி இறப்புகளுக்கு - எல்லா வயதுப் பிரிவுகளும்

 • ஆனால் 2வது காரணி பதின்பருவ மற்றும் இளைஞர்கள் (15-29 வயது) இறப்புகளைப் பொறுத்தவரை.

உலகப் பிரச்சனை, ஆனால் ஒரே அளவில் அல்ல

உலகச் சுகாதார நிறுவனம் இறப்புகளை காரணங்கள் அடிப்படையில் ஆராய்ந்து வெளியிட்ட புள்ளிவிவரங்கள், 2012ம் ஆண்டிலிருந்து, தற்கொலை என்பது உலகளாவிய ஒரு பிரச்சனை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

ஆனால் பிராந்திய ரீதியில் இந்தப் புள்ளிவிவரங்களை உடைத்துப் பார்த்தால், அது அதிக வருமானம் கொண்ட செல்வந்த நாடுகள் மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிடையே உள்ள மோசமான வேறுபாடுகளைக் காட்டுகின்றது.

உண்மையில் உலக அளவில் நடக்கும் தற்கொலைகளில் 75 சதவீதத் தற்கொலைகள் இந்த குறைந்த அல்லது நடுத்தர வருமான நாடுகளில்தான் நடக்கின்றன.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பதின்பருவத்தினர் மீது குறிப்பாக கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று தெரிகிறது.

மிகக் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் 10லிருந்து 25 வயதான இளைஞர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் மிக அதிகமாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆனால் செல்வந்த சமூகங்களில் இந்த அளவு அதிக தற்கொலைகள் நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் காட்டவில்லை.

ஆண் பெண் வேறுபாடுகள்

பாலினப் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டால், ஆண்கள்தான் பெண்களைவிட அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். " பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஆனால் தற்கொலை முயற்சியில் அதிகம் 'வெல்வது' ஆண்கள்தான் என்கிறார் ஃப்ளெயிச்மான். இவர் குறிப்பிடுவது பதின்பருவத்தினர் விஷயத்தில் மட்டும்.

ஆண்களைப் பொறுத்தவரை, ஆண்கள் எப்படி "நடந்துகொள்ளவேண்டும்" என்ற சமூக எதிர்பார்ப்பும், ஆண்மைத் தன்மை என்ற விஷயமும்தான் இந்த வேறுபாட்டின் பின் இருக்கும் முக்கிய காரணிகள் என்கிறார் அவர்

ஆனால் இந்த பாலின வேறுபாடு வறிய நாடுகளில் குறைகிறது. அங்கு பெண்கள் மற்றும் இளம் வயதினர் எல்லாம் குறிப்பாக பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள்.

செல்வந்த நாடுகளில் பெண்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையில் ஆண்களே தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் இந்த ஆண்-பெண் விகிதாச்சாரம் இன்னும் குறைவாக இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு 1.5 ஆண்கள் என்ற விகிதம் நிலவுகிறது.

பதின்பருவத்தினர்

ஏன் அவர்கள் இறக்கிறார்கள்?

1.3 மிலியன்

பதின்பருவத்தினர் உலகெங்கும் ஆண்டுதோறும் இறக்கிறார்கள். பெரும்பாலும் தவிர்க்கப்படக்கூடிய அல்லது சிகிச்சை அளிக்கப்படக்கூடிய காரணங்களால்

 • 1. சாலை விபத்து இந்த இறப்புகளில் முக்கிய காரணி. மொத்த இறப்புகளில் 11.6%

 • 2. தற்கொலை இரண்டாவது இடம். பதின்பருவ இறப்புகளில் தற்கொலை சம்பவங்கள் 7.3%.

 • 3. எச்.ஐ.வி.எய்ட்ஸ் மற்றும் கீழ் சுவாசப் பாதை தொற்றுகள்

 • 4. அடிதடி

தென்கிழக்கு ஆசியாவுக்கு முதலிடம்

தென் கிழக்கு ஆசிய போன்ற உலகின் சில பிராந்தியங்களில், 15- 19 வயதுக்குட்பட்டவர்களின் இறப்புகளில் தற்கொலைதான் முதல் காரணியாக இருக்கிறது.

இந்தப் பிராந்தியத்தில் பதின்பருவ இளம் பெண்களின் மரணங்களில் ஆறில் ஒன்று தற்கொலையால்தான் நிகழ்கிறது.

ஆப்ரிக்கா புள்ளிவிவரங்கள் மிகவும் முக்கியமானவை. இந்தப் பகுதியில் தற்கொலையால் நிகழும் மரணங்கள் ( ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒன்பது பேர்) என்பது தென்கிழக்கு ஆசியாவைத் தவிர மற்ற எல்லாப் பகுதிகளையும் விட அதிகம்.

இங்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வதற்கு மிக எளிதான வழிகள் இருக்கின்றன, பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு உதவிகள் இல்லை என்பதுதான் நாம் புரிந்துகொள்ளக்கூடியது . பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவை எளிதாகக் கிடைக்கும் கிராமப்புறங்களில் இது எளிதாக நிகழ்கிறது. அங்கு அவர்களுக்கு நேரத்துக்கு உதவியும் கிடைப்பதில்லை", என்கிறார் ஃப்ள்யெச்மான்.

உலகிலேயே மிக அதிக தற்கொலை விகிதம்

ஒரு லட்சம் பதின்பருவத்தினரில் தற்கொலை விகிதம்

1.இந்தியா

35.5 , ( இங்கு மட்டுமே ஆண்களைவிட பெண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்)

 • 2. ஜிம்பாப்வே 30.9

 • 3. கஜக்ஸ்தான் 30.8

 • 4. கயானா 29.7

 • 5. சூரினாம் 28.2

 • 6. ரஷ்யா மற்றும் புருண்டி 27.3

 • 8. லிதுவேனியா

 • 9. நேபாளம் 25.8

 • 10. துருக்மேனிஸ்தான் 25.7

 • 11. மொசாம்பிக் 25.2

 • 12. எக்வெட்டோரியல் கினியா 24.8

எச்சரிக்கை சமிக்ஞைகள்

தற்கொலைகள் ஏதோ தற்செயலாக நிகழ்வதில்லை என்று கூறும் வல்லுநர்கள், தற்கொலை செய்து கொள்ளும் பதின்பருவத்தினரில் 90 சதவீதத்தினர், மன நல பிரச்சனை ஏதோ இருப்பதால் தான் அதைச் செய்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன என்கிறார்கள்.

இந்த வயதுப் பிரிவில் உடல் நலக் குறைவுக்கு முதல் காரணியாக இருக்கும் மன அழுத்தம்தான் தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது. அதையடுத்து கவலை, வன்முறை மற்றும் போதைப்பொருள் உபயோகித்தல் போன்றவை வருகின்றன.

ஆனால் சூழ்நிலை மாறுபடுதல், பள்ளிக்கூடத்தில் கடினமான சூழல் நிலவுவது, நண்பர்களுடன் பிரச்சனை மற்றும் பாலியல் அடையாள முரண்பாடுகள் போன்ற வேறு சில நுட்பமான காரணங்களும் இருக்கலாம்.

அதனால்தான், வல்லுநர்கள் ஆரம்பகட்ட சமிக்ஞைகளைத் தேடுகிறார்கள்.

பல்கலைக் கழக வாழ்க்கை என்பது வேடிக்கையும், கேளிக்கையும் நிறைந்த சுய அடையாளத்தை தரிசிக்கும் ஒரு அனுபவமாக சித்தரிக்கப்பட்டாலும், யதார்த்தம் என்னவென்றால், வீட்டிலிருந்து வெளியேறுவது என்பது பல இளைஞர்களுக்கு கடும் போராட்டமான ஒன்றாக இருக்கும் என்பதுதான், என்கிறார் ஃப்ளெய்ச்மான்.

ஆனால், மன நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கும் எல்லா பதின்பருவ இளைஞரும் தற்கொலை செய்து கொண்டுவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. மேலும் இந்தப் பிரச்சனையே மிகவும் சிக்கலான ஒன்று. பல சமூகங்களில் தற்கொலை செய்துகொள்ளும் நடத்தை என்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் அது பதியப்படுவதில்லை. எனவே, தற்கொலை செய்துகொள்ள முயலும் மனோபாவம் என்பது சில சமயங்களில் தவறாக பட்டியலிடப்படுகிறது.

படத்தின் காப்புரிமை GETTY

சமூகக் கொடுங்கனவு

மிரட்டுவது, அதிலும் சமீபகாலமாக, இணையத்தில் மிரட்டுவது, போன்றவைகளை தற்கொலைத் தடுப்பு திட்டங்கள் கவனமாகக் கண்காணிக்கின்றன.

மிரட்டுவதும், தற்கொலை தொடர்பான நடத்தையும் நெருக்கமாகப் பிணைந்தவை ஒரு விதமான சிக்கலான வகையில், என்கிறது அமெரிக்க ஊறு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்.

மிரட்டப்படுபவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு காணப்படுகிறது. ஆனால் மிரட்டப்படுவதுதான் தற்கொலைக்கு ஒரே காரணம் என்று முடிவு கட்டுவது சரியானதாக இருக்காது என்று இந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறுகிறது.

மிகைப்படுத்தப்பட்ட பரபரப்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் பலவீனமானவர்களை தற்கொலை நடத்தைக்குத் தூண்டமுடியும். இதை வல்லுநர்கள் " சமூக தொற்றுநோய்" என்கிறார்கள்.

நீண்ட கால தற்கொலைத் தடுப்பு யுக்திகள் தேவைப்படுகின்றன அவைகளை அரசுகள் உருவாக்கி நடத்தவேண்டும் என்று பொதுச் சுகாதார ஆலோசகர்கள் கருதுகிறார்கள்.

இது வரை 28 நாடுகள் மட்டுமே அத்தகைய தேசிய திட்டங்களை வைத்திருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இது போன்ற தற்கொலைத் தடுப்பு திட்டத்தை வைத்திருக்கும் பின்லாந்தில் தற்கொலைகள் ஒரு தசாப்த காலத்தில் 30 சதவீதம் என்ற அளவில் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார் ஃப்ளெய்ச்மான்