இந்திய வட்டி விகிதம் அரை சதவீதம் குறைப்பு

படத்தின் காப்புரிமை AFP
Image caption வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

இந்தியாவின் மத்திய வங்கியான, ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்குக் கடனாகத் தரும் தொகைக்கான வட்டி விகிதத்தை வைத்துத்தான் , வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை நிர்ணயிக்கின்றன.

இந்த வட்டி விகிதம் தற்போதைய 7.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் பணவீக்கம் ஆகஸ்டு மாதத்தில் 3.6 சதவீதமாகக் குறைந்ததிலிருந்து வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி அழுத்தத்தில் வந்திருந்தது.

ஆனால் இந்த அரை சதவீத வட்டிக் குறைப்பை பொருளாதார ஆய்வாளர்களே எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சுமார் கால் சதவீத வட்டிக்குறைப்புதான் அறிவிக்கப்படும் என்று எண்ணியிருந்தனர்.

இந்த வெட்டுடன் சுமார் நான்கரை ஆண்டுகளில் இந்தியாவில் வட்டி விகிதங்கள் மிகக் குறைந்த அளவுக்கு வந்திருக்கின்றன.

பொருளாதாரம் மீட்சி அடைவது ஓரளவு நடந்து கொண்டிருக்கிறது ஆனால் அது இன்னும் உயிர்ப்பான நிலையை எட்டவில்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் ஒரு அறிக்கையில் கூறினார்.

இதன் மூலம் முதலீடுகள் அதிகம் வரும் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.