உத்தரப்பிரதேச தலித் குடும்ப ஆடை களைவு: நடந்தது என்ன?

  • 10 அக்டோபர் 2015
தலித் குடும்பத்தை உத்தரப்பிரதேசக் காவல்துறை ஆடைகளைக் களைந்ததாக புகார் படத்தின் காப்புரிமை THINKSTOCK
Image caption தலித் குடும்பத்தை உத்தரப்பிரதேசக் காவல்துறை ஆடைகளைக் களைந்ததாக புகார்

கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்றொரு பழமொழி உண்டு.

இந்த பழமொழி சமூக வலைத்தளங்கள் விஷயத்தில் தற்போது உண்மையாகியிருக்கிறது.

நேற்று வியாழக்கிழமை திடீரென்று பலர் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாண நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளத் துவங்கினார்கள்.

அந்த காட்சி உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் ஒரு காவல்நிலையத்தின் முன்னர் எடுக்கப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில், இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர்கள் பலரும் இதை முன்வைத்து கருத்துக்களை வெளியிடத்துவங்கினார்கள்.

காவல்துறையின் அட்டூழியம் குறித்தும், தலித்துகள் மீதான பழிவாங்கல் குறித்தும், நிலைகுலைந்த நிர்வாக அமைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தெல்லாம் இந்த சமூக வலைத்தளப் பதிவுகள் பேசின.

வேறு சில சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள், இந்த புகைப்படத்தை சமீபத்தில் மாட்டுக்கறியை தன் வீட்டின் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தார் என்கிற வதந்தியின் பேரில் ஒரு முஸ்லீம் கொல்லப்பட்ட சம்பவத்தோடு தொடர்புபடுத்தியிருந்தார்கள்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சமூக வலைத்தளங்களின் சமூக பொறுப்பு குறித்து தொடர்ந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன

அடுத்த சில மணிகளில் இதே சம்பவம் தொடர்பான மிகவும் அதிர்ச்சிகரமான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக உள்ளூர் ஊடகங்கள் இந்த சம்பவம் குறித்து செய்தியை வெளியிடத்துவங்கின. அந்த செய்திகளின் தகவல்கள் வேறொரு கோணத்தை கொடுத்தன.

இந்த சம்பவம் குறித்த காணொளியின் முழுமையையும் பார்க்கும்போது அதில் சம்பந்தப்பட்ட தம்பதிகள் தமது உடைகளை தாமே களைந்து கொண்டனர். அங்கே இருந்த காவலர்கள் இவர்களின் ஆடைக்களைவை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இந்த காணொளியில் இருந்த தலித் தம்பதியினர் காவல் நிலையத்தில் அளித்த தங்களின் புகாரைக் காவலர்கள் பதிய மறுத்ததை எதிர்த்து தங்களின் ஆடைகளை அவர்களே களைந்ததாக உள்ளூர் செய்தித்தாளான அமர் உஜாலா செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த பிரதேசத்தின் காவல்துறை உயர் அதிகாரியை பிபிசி ஹிந்தி செய்திச்சேவையின் சார்பில் தொடர்புகொண்டு கருத்துக் கேட்டபோது இது குறித்து அவர் காட்டமாக பதில் அளித்தார்.

“அந்த குடும்பம் தலித் குடும்பம் தான். அதில் சந்தேகமில்லை”, என்றார் காவல்துறை உயரதிகாரி எஸ் கிரண். ஆனால் அந்த பெண்ணையோ, அந்த குடும்பத்தையோ நிர்வாணப்படுத்தியதில் காவல்துறைக்கு எந்த பங்கும் இல்லை என்றார் அவர்.

“அந்த ஆணின் பெயர் சுனில் கவுதம். அவர்கள் தங்களுக்கு சொந்தமான பைக் திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த பைக்கை மஹாதேவ் என்பவர் தான் திருடியதாகவும் அவரை உடனடியாக கைது செய்யும்படியும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து நாங்கள் புலனாய்வு செய்து கொண்டிருந்தோம். அந்த பின்னணியில் அவர்கள் குடும்பமாக காவல் நிலையத்துக்கு வந்து தெருவில் நின்றபடி தங்கள் ஆடைகளை தாங்களாகவே களையத்துவங்கினார்கள்”, என்றார் காவல்துறை உயரதிகாரி கிரண்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்திய காவல்துறையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் அவர்கள் மீதான புகார்களை நம்பும்படி செய்வதாக உள்ளன

அவர்களின் ஆடை களைவில் காவல்துறைக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். “நாங்கள் அவர்களைத் தடுத்தோம். தற்போது அவர்கள் மீது அநாகரீகமாக நடந்துகொண்டமைக்காக வழக்கு தொடுத்திருக்கிறோம்”, என்றார் கிரண்.

ஆனாலும் இந்த செய்தி எழுதப்படும்போது கூட இன்னமும் பலர் இந்த செய்தியையும், காணொளியையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தபடியே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அந்த காணொளியிலும் புகைப்படத்திலும் இருப்பவர்களின் முகங்களைக் கூட மறைக்காமல் அவற்றை பகிர்கிறார்கள்.

டிஜிடல் யுகத்தை நோக்கி இந்தியா செல்வதாகக் கூறிக்கொள்ளும் காலத்தில் தங்களின் புகார் குறித்து உரிய கவனத்தைப் பெறுவதற்காக தலித் குடும்பம் தமது ஆடைகளைக்களைய வேண்டிய சூழல் நிலவுவது வருத்தப்பட வேண்டிய நிலைமை தான்.

ஆனால் அந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர்களில் பலர் குறைந்தபட்சம் அவர்களின் முக அடையாளங்களையாவது மறைக்க முயலாதது அருவெறுக்கத்தக்கது மட்டுமல்ல; இந்த ஒட்டுமொத்த பிரச்சனையையுமே மலினப்படுத்தும் செயல்.

(பிபிசி ஹிந்தி சேவையின் சுஷில்குமார் ஜாவின் கட்டுரையின் தமிழ் வடிவம்)

இந்தச் செய்தி குறித்து மேலும்