மதுவிலக்கு பிரச்சார இடது சாரிப் பாடகர் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது

படத்தின் காப்புரிமை vinavu
Image caption கைது செய்யப்பட்ட கலைஞர் கோவன்

தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி, இடது சாரி இயக்கமான, மக்கள் கலை இலக்கிய கழகத்தின், கலைஞரான கோவன் என்கிற சிவதாஸ் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபான கடைகளை மூட வலியுறுத்தியும், மாநில முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தும் அவர் பாடல்களை பாடி வந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Image caption தமிழகத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மது விற்பனையில் ஈடுபடுகிறது

வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது இல்லத்துக்கு சென்ற காவல்துறையினரால், அவர் காரணம் கூட அறிவிக்கப்படாமல் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டார் என அவரது வழக்கறிஞர் மீனாட்சி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தபிறகே அவரை பார்க்க காவல்துறையினர் அனுமதி வழங்கியதாகவும் அவர் கூறுகிறார்.

மது விற்பனைக்கு எதிரான அவரது பாடல் வினவு.காம் எனும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் இணையதளத்தில் வெளியானது என்றும், அதன் காரணமாக இணைய குற்றங்களுக்கான காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார் எனவும் மீனாட்சி தெரிவித்தார்.

தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர் தூண்டினார் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது எனவும் அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.

சமூகத்தை சீரழிக்கும் மதுவுக்கு எதிராக சமூக ஆர்வமுள்ள ஒரு பாடகர் என்கிற முறையிலேயே அவர் பாடல்களை பாடிவந்தார் எனவும் அவரது தரப்பினர் வாதிடுகிறார்ர்கள்

அவரது கைதுக்கு தமிழகத்தில் பரந்துபட்ட அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து போலிஸ் தரப்புத் தகவல்களை இதுவரை பெற முடியவில்லை.