சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது

  • 2 டிசம்பர் 2015

சென்னையில் பெய்த கடும் மழையை அடுத்து, வெள்ள நீர் ஓடுபாதையில் புகுந்ததால், சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Image caption சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடல்

விமான நிலைய ஆணைய அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில், நேற்றிரவு ( செவ்வாய்க்கிழமை) சுமார் 8 மணி வரை , மழை இருந்தாலும் விமான சேவைகள் கடினமான சூழலில் இயக்கப்பட்டன, ஆனால் இடைவிடாத மழை விமான நிலையப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டதாகக் கூறியது.

ஆனால் அதற்குப்பின்னர் ஓடுபாதைகளில் தண்ணீர் சுமார் இரண்டடிக்கு உயர்ந்ததால், விமான ஓடுதளம் சுமார் மூன்று மணி நேரம் வரை மூடப்பட்டு, பின்னர் அது புதன் கிழமை காலை ஆறு மணி வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால் இன்று புதன்கிழமை காலை ஆறு மணிக்கு நிலைமை மேலும் மோசமாகி, மொத்த இயங்கும் பரப்பு சுமார் 7 அடி தண்ணீரில் மூழ்கியதை அடுத்து, சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களும் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. ஒரே ஒரு சர்வதேச விமானம் மட்டும், மருத்துவ காரணங்களுக்காக, இறங்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறியது.

மூடப்பட்ட இந்த சமயத்தில், 12 உள்நாட்டு விமான சேவைகளும், 12 சர்வதேச விமானங்களும் திருப்பிவிடப்பட்டன. விமான நிலையத்தில் 34 விமானங்கள் நிற்கின்றன .சென்னைக்கு வரும் அனைத்து விமானங்கள் மற்றும் சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானப் பறத்தலுக்கு உதவும் அனைத்துக் கருவிகளும் விமான நிலையத்தில் ஏற்பட்ட கடும் தண்ணீர் சூழல் காரணமாக அணைக்கப்பட்டுள்ளன. ஆனால் கண்காணிப்பு ராடார் கருவிகளும், விமானங்கள் வானில் பறக்க வழிகாட்டும் வான் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் தேதி மதியம் 12 மணி வரை மூடப்பட்டிருக்கும் . நிலைமைகள் கவனமாகக் கண்காணிக்கப்படுவதாகவும், சேவைகள் திரும்பத் தொடங்குவது மறு பரீசலனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அது கூறியது.

பாதிக்கப்பட்ட பயணிகளில் 90 பேர் பெங்களூருக்கு பேருந்துகள் மூலம் அனுப்பப்பட்டனர் . சுமார் 200 பயணிகள் நகரில் உள்ள வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய விமான நிலைய ஆணையம் அவசர தொடர்புக்கு சென்னை முனைய நிர்வாகியின் எண்களை அறிவித்திருக்கிறது. அவை: (00 91) 44 22563100, மற்றும்

8056220066