சென்னை வெள்ளம் : பெருமளவிலான மீட்பு நடவடிக்கைகள் துவங்கின

  • 3 டிசம்பர் 2015
படத்தின் காப்புரிமை EPA

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான மிகப்பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய ராணுவத்தினரால் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுகள் மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டுச்செல்லும் பணியில் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கான ரயில் சேவைகளும் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளன.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக, தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

கடந்த மாதம் பெய்த விடா மழையால், சென்னை நகரமே ஒரு வாரம் ஸ்தம்பித்துப் போனது.

மீண்டும் மூன்று நாட்கள் பெருமழை பெய்ததையடுத்து ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகள், மருத்துவமனைகள், ரயில் தடங்கள் மற்றும் விமான நிலையம் ஆகியவை மூழ்கிபோயுள்ளன.

படத்தின் காப்புரிமை EPA

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

வெள்ள நீர் புகுந்துள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து, பிரதான சாலைகளிலிருந்தும் நீரை வெளியேற்றுவதற்கான வழி கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவாலாக இருப்பதாக, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்தின் அதிகாரி அனுராக் குப்தா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் மூன்று நாட்கள் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.