அனைவரும் அர்ச்சகராகும் உரிமையின் அடுத்தகட்டம் குறித்து ஆலோசித்து முடிவு: திமுக

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது

தமிழகக் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாமா என்ற வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும், அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோரவேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த மாணவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவரான ரங்கநாதன், தாங்கள் எங்கு நியமிக்கப்பட்டாலும் அதனை அங்கு இருக்கும் அர்ச்சகர்கள் எதிர்ப்பார்கள் என்று கூறுகிறார்.

இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஓரளவுக்கு வெற்றி என்கிறார் ஆதி சிவாச்சாரியார் சங்கத்தைச் சேர்ந்த உக்கிரபாண்டி பட்டர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆண்டவனை அர்ச்சிப்பதிலும் வணங்குவதிலும் ஜாதி வேறுபாடு இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். மேலும் இன்றைய தீர்ப்பு குறித்து உரிய நேரத்தில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு,

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கலந்தாய்வு செய்து அடுத்தகட்ட நவடிக்கை எடுக்கப்போவதாக கூறுகிறார் திமுக தலைவர் மு கருணாநிதி

தமிழகத்தில் இருக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் பிராமணரல்லாதவர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோவில்கள் நிறையவே இருப்பதாகவும் இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பை தாங்கள் வரவேற்பதாகவும் இந்து முன்னணியின் ராமகோபால் பிபிசியிடம் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார். கால காலமாக நிலவி படிமமாக இறுகிப்போய்விட்ட சாதிய முறைகளை இந்தத் தீர்ப்பு நிலை நிறுத்துவதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

ஆனால், இந்தத் தீர்ப்பு உண்மையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஆதரவானது என்ற என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடிய கோவிலன் பூங்குன்றன்.