ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி

தமிழகத்தில் பொங்கல் தினத்தையொட்டி பிரதானமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜல்லிக்கட்டு தமிழகத்தின் வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது

இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் மாட்டு வண்டிப் பந்தையங்கள் ஆகியவற்றில் காட்சிப் படுத்தும் மிருகங்களாக பயிற்றுவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Image caption கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி

மாவட்டவாரியாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

Image caption தென் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலம்

மாட்டு வண்டிப் பந்தையங்களைப் பொறுத்தவரை, 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகாமல், சரியான பாதையில் அந்தப் பந்தையங்களை நடத்த வேண்டுமெனவும் ஜல்லிக்கட்டில் காளையானது 15 மீட்டர் சுற்றளவுக்குள் பிடிக்கப்பட வேண்டுமெனவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

Image caption பிராணிகள் நலச் சங்கத்தினர் ஜல்லிக்கட்டை தொடர்ந்து எதிர்க்கின்றனர்

போட்டிகளை நடத்துவதற்கு முன்பாக விலங்குகள் நலத்துறையினர் காளைகளைப் பரிசோதிக்க வேண்டுமெனவும் அவற்றுக்கு மருந்துகள் ஏதும் கொடுக்கப்பட்டிருக்கக்கூடாது என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

மிருக வதைக்கு எதிரான மாவட்ட கமிட்டி, மாவட்ட விலங்குகள் நல வாரியம் போன்றவை இதனைக் கண்காணிக்க வேண்டுமென்றும் இந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

Image caption ஜல்லிக்கட்டு நடக்கும்போது பலர் காயமடையவும் நேரிடுகிறது

முன்னதாக, 11.07.2011ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப்படுத்தும் மிருகங்களின் பட்டியலில் காளை மாட்டையும் இணைந்தது. இதையடுத்து பெரும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆனால், 2014ஆம் ஆண்டில் மே மாதம் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதித்தது.

இதனால், 2015ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.

தற்போதும் மத்திய அரசு, காட்சிப்படுத்தும் மிருகங்களின் பட்டியலில் இருந்து காளையை நீக்கவில்லை.

Image caption யாருக்கு வெற்றி?

இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கோரிக்கைவிடுத்துவந்தன.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை தி.மு.க. தலைவர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

Image caption ஆக்ரோஷமாக சிறீக் கிளம்புக் காளையை அடக்க இளைஞர்கள் ஆர்வம்

இந்த முயற்சியில் ஈடுபட்ட மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு விலங்குகள் நல ஆதரவு அமைப்பான 'பெடா' கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.