மூடிய வாடிவாசல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குப் பெயர் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்களில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நடைபெறாததால், இந்த ஊர்கள் களையிழந்து காணப்பட்டன. தொடர் போராட்டங்களும் நடைபெற்றன.

ஞாயிற்றுகிழமை காலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் மாடுகள் வெளியேறும் வாடிவாசலுக்கு முன்பாக அமர்ந்து ஒப்பாரி வைத்தனர்.

அலங்காநல்லூர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.

போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில், ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டிருப்பது தங்களுக்கு பெரும் மன வருத்தத்தை அளிப்பதாக மாடுபிடிக்கும் வீரர்கள் தெரிவித்தனர்.

இந்த மாதம் 15ஆம் தேதி அவனியாபுரத்திலும் 16ஆம் தேதி பாலமேட்டிலும் 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் இந்தப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தடை, போட்டிகள் நடைபெறவிருந்த பகுதிகளில் ஏமாற்றத்தையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியிருந்ததை காணக் கூடியதாக இருந்தது என அங்கு சென்றிருந்த எமது செய்தியாளர் முரளிதரன் கூறுகிறார்.

அப்பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அலங்காநல்லூர், பால மேடு ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன எனவும் அவர் கூறுகிறார்.

சனிக்கிழகை-மாட்டுப் பொங்கல் தினத்தன்று காளைகளை வெளியில் அழைத்துச் செல்ல காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

வாடிவாசலிலிருந்து வேகமாக ஒடிவரும் காளைகளை பிடிக்கும் இந்தப் போட்டி ஆண்களுக்கான போட்டியாகவே நடந்துவரும் நிலையில், போட்டியை நடத்த வேண்டும் எனும் ஆர்ப்பாட்டங்களுக்கு பெண்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பதில் தாங்களே பெரும் பங்கு வகிப்பதாக அப்பெண்கள் கூறினர்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறாத நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அலங்காநல்லூர் கிராம மக்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான சர்ச்சை ஒருபுறமிருக்க, இந்தப் போட்டிகளில் வீரர்களும் மாடுகளும் பங்கேற்பதில் ஜாதிப் பாகுபாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை தலித் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.