கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை: ப. சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் சொத்துக்களை குவித்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை என முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption கார்த்தி சிதம்பரம் சொத்துக்களை குவித்திருப்பதாக நிரூபித்தால், அரசிடமே அவற்றைத் தந்துவிடுவதாக சிதம்பரம் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், கார்த்தி சிதம்பரம் சட்டரீதியான தொழில்களை நடத்திவருவதோடு, தங்களது முன்னோர்களின் சொத்துக்களை நிர்வகித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.

வருமான வரிக் கணக்கைத் தாக்கல்செய்யும்போது, தனக்கு என்னென்ன சொத்துக்கள், கடன்கள் இருக்கின்றன என்பது குறித்து அவர் தெரிவித்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்படாத சொத்துக்கள் வேறு எங்கும் இல்லையென்றும் சிதம்பரம் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை karti p chidambaram facebook
Image caption தனது மகன் என்பதாலேயே கார்த்தி சிதம்பரம் குறிவைக்கப்படுவதாக ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

கார்த்தி சிதம்பரத்திற்கு வெளியில் தெரிவிக்காத சொத்துக்கள் இருப்பதாக அரசு நினைத்தால், அந்தச் சொத்துக்களைப் பட்டியலிட வேண்டுமென்றும் அப்படிப் பட்டியலிட்டால் அந்தச் சொத்துக்கள் அனைத்தையும் அரசுக்கு தந்துவிடுவதாகவும் சிதம்பரம் கூறியிருக்கிறார்.

தனது மகன் என்பதால்தான் கார்த்தி சிதம்பரம் குறிவைக்கப்படுகிறார் என்றும் உண்மையான இலக்கு தான்தான் என்றும் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக இந்திய நாளிதழ் ஒன்று கார்த்தி சிதம்பரம் பல நாடுகளில் சொத்துக்களைக் குவித்திருப்பதாக செய்தி வெளியிட்டது.