கேரள ஆலயத்தில் வெடி விபத்து: 100க்கும் அதிகமானவர்கள் பலி

  • 10 ஏப்ரல் 2016

பரவூர் புட்டிங்கல் பகவதி ஆலயத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பில் நீதி விசாரணை ஒன்றுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை binu
Image caption திருவிழாவின்போது சேமித்து வைக்கப்படிருந்த வெடிபொருட்கள்

அந்த வெடிவிபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

ஆலயத் திருவிழாவின்போது நடத்தப்பட்ட வாணவேடிக்கையிலிருந்து வெளியான தீப்பொறிகள், பெரிய அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீது விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை binu
Image caption வெடிவிபத்து காரணமாக ஏற்பட்ட இடிபாடுகள்

இந்த வெடிவிபத்து காரணமாக ஆலயத்துக்கு அருகிலிருந்த கட்டடம் ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது.

அந்த ஆலயத்தில் நடைபெறு வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் வாணவேடிக்கையைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.

படத்தின் காப்புரிமை binu
Image caption திருவிழா வாணவேடிக்கையை காண ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்

பாதுகாப்பு அச்சங்கள் காரணங்களுக்காக வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடிக்கும் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மாநில அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தென் இந்திய மாநிலமான கேரளாவிலுள்ள இந்து ஆலயத் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை thehindu
Image caption வெடி விபத்தால் கொழுந்துவிட்டு எரியும் தீ

கொல்லம் மாவட்டம் பரவூரிலுள்ள புட்டிங்கல் பகவதி ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்திரத் திருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில் பட்டாசுகள் சேமித்து வைத்திருந்த கிடங்கு ஒன்று, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தீ பிடித்து வெடித்துச் சிதறியது.

இதன்போது அந்த வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடிக்கப்படுவதை பார்க்க வந்திருந்த பலர், அந்தத் தீ விபத்தில் சிக்கினர்.

அதில் சிக்கியவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் செல்லும் வழியிலோ அல்லது பின்னரோ இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

அந்தப் பட்டாசு கிடங்கு வெடித்துச் சிதறியபோது அந்த வெடிச்சத்தம் ஒரு கிலோமீட்டருக்கும் அப்பால் கேட்டது என செய்திகள் கூறுகின்றன.

இந்த விபத்து வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.