வாக்காளர்களுக்குப் பணம்: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

  • 14 மே 2016

தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி, திங்கட்கிழமை சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'ஓட்டுக்கு பணம்' குறித்து தேர்தல் ஆணையம் கண்டனமும் கவலையும் வெளியிட்டுள்ளது

தேர்தல் நடவடிக்கைகளின் துவக்க நாட்களிலிருந்தே, அரவக்குறிச்சி தொகுதியில் பெருமளவில் பணவிநியோகமும் பரிசுப்பொருட்களின் விநியோகமும் நடந்ததாக தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று அரவக் குறிச்சியிலுள்ள அன்புநாதன் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் 4.77 கோடி ரூபாய் பிடிபட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் தேர்தல் ஆணையம், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, அவருக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் சிலருக்கும் இடையில் தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாகக் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இம்முறை கடுமையான கண்காணிப்பையும் மீறி தமிழகத்தில் பணவிநியோகம் நடைபெறுகிறது எனக் குற்றச்சாட்டுகள்.

இந்தப் பணத்தோடு சேலைகள், வேட்டிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் இவை சுமார் 1.30 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதைக் காட்டும் ஆவணங்கள் கிடைத்ததாகவும் மேலும் அங்கிருந்து பணம் எண்ணும் எந்திரங்கள், பதிவுசெய்யப்படாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அவை பணத்தைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பணவிநியோகம் தொடர்பில், பல கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு புகார்களை அனுப்பியிருந்தன.

மே 10ஆம் தேதி தி.மு.க. வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி வீட்டிலும் அவருடைய மகன் சிவராமனின் சென்னை மற்றும் கரூர் இல்லங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து 1.98 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

மேலும் பண விநியோகம் நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்றபோது, ஒரு நபர் 68,000 ரூபாயை விட்டுவிட்டு ஓடிவிட்டதையும் 429 லிட்டர் மதுபானம் பிடிபட்டிருப்பதையும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை THINKSTOCK
Image caption மதுபானமும் பெருமளவுக்கு விநியோகிக்கப்பட்டது என்று குற்றச்சாட்டுகள்

இந்த ஒட்டுமொத்தச் சூழலையும் கவனமுடன் ஆராய்ந்ததில் இந்தப் பொருட்கள், பணம் எல்லாமே வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காகவே வைக்கப்பட்டிருந்தன என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

இந்தப் பின்னணியில், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் கடுமையாக மீறப்பட்டிருக்கின்றன என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறியிருக்கும் தேர்தல் ஆணையம் இந்தச் சூழலில் அங்குத் தேர்தலை நடத்தினால், அது நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் இருக்காது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆகவே, விநியோகிக்கப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருட்களின் தாக்கம் மறையும்வரை தேர்தலை ஒத்திவைப்பதென்றும் 16ஆம் தேதிக்குப் பதிலாக மே 23ஆம் தேதியன்று தேர்தலை நடத்த முடிவுசெய்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மே 25ஆம் தேதி நடக்குமென்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.