செம்மரக் கடத்தல் கொலை: 'மனித உரிமை ஆணையம் வழக்கைத் தொடரும்'

ஆந்திர மாநிலத்தின் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான தங்கள் தரப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் தான் உள்ளது என்றும், அது தொடர்பான தீவிர நடவடிக்கைகள் தொடரும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர மாநில வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்கள்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் திருப்பதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தச் சென்றார்கள் என்று கூறப்பட்டு, செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் தங்கள் தரப்பு அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி முருகேசனிடம், ஆந்திர மாநிலத்தின் சிறப்பு புலனாய்வு குழு தற்போது தாக்கல் செய்துள்ள அறிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அவர், இந்த வழக்கு நிலுவையில் தான் உள்ளது என்றும், அது தொடர்பான தீவிர நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இருபது தமிழர்களின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசுக்கும் ஆந்திர மாநில அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ஐந்து லட்ச ரூபாயை அளிக்க வேண்டுமெனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்தே இந்த விவகாரத்தின் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஆந்திர மாநில அரசு நியமித்தது.

அந்த புலனாய்வு குழு ஓராண்டு காலமாக மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை தொடர்பான செய்திகள் மீண்டும் புதிய சர்ச்சைகளை உருவாகியுள்ளது.

குறிப்பாக ஆந்திர சிறப்பு அதிரடிப்படையினர் மீதான குற்றச்சாற்றுக்கு ஆதாரம் இல்லை என அந்த அறிக்கை கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனங்களையும் வெளியிடப்பட்டு வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்த சிக்கலில் பா.ம.க. மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தாலோ அல்லது பா.ம.க. தொடர்ந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைந்துக் கொண்டிருந்தாலோ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எப்போதோ நீதி கிடைத்திருக்கும். ஆனால், வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டியதால் தான் ஆந்திர அரசுக்கு இந்த அளவு துணிச்சல் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஒரு போலி என்கவுண்டர் நடவடிக்கையே என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர மாநில அரசியல் பிரமுகர் சிந்தா மோகன் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

அந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அச்சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்று வந்த சிந்தா மோகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தான் ஒரு மருத்துவர் என்றும் பிரேத பரிசோதனை முதல் அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும் தான் அனைத்து சடலங்களையும் பார்த்ததில் ஒரு சடலத்தின் தலையில் மூளை வெளியில் தெறித்து வந்திருந்தது என்றும் அது துப்பாக்கியால் சுடப்பட்டதால் வந்ததல்ல என்றும் அரிவாளால் தலை வெட்டி பிளக்கப்பட்டிருந்தது என்றும் புகார் தெரிவித்திருந்தார்.

அப்போது அதற்கு பதிலளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது தவறு என குறிப்பிட்டிருந்தார். மேலும் நாட்டின் இயற்கை வளங்களை பாதுக்காக்கவே முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.