டில்லியில் காங்கோ மாணவர் கொலை விவகாரம்: ஆப்ரிக்க தூதர்கள் கடும் கண்டனம்

  • 25 மே 2016

ஆப்ரிக்கர்களுக்கு எதிராக தொடரும் வன்முறை சம்பவங்களை அடுத்து, எதிர்வரும் ஆப்ரிக்க தினத்தைப் புறக்கணிக்க இந்தியாவில் உள்ள ஆப்ரிக்கத் தூதர்கள் முடிவு செய்துள்ளனர்.

Image caption இந்தியாவில் ஆப்ரிக்கர்களுக்கு எதிரான வன்முறை குறித்து சர்ச்சை பெரிதாகிறது (ஆவணப்படம்)

கடந்த வெள்ளிக்கிழமை டில்லியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த மசுண்டா கிட்டாடா ஆலிவர் என்ற மாணவர், ஆட்டோவில் ஏற முயல்கையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மூன்று நபர்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்த இந்தியாவில் உள்ள ஆப்ரிக்கத் தூதர்கள், இந்தப் படுகொலையைக் கடுமையாக கண்டனம் செய்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆப்ரிக்கர்களுக்கு எதிராக நடந்த வன்சம்பவங்களைக் குறிப்பிட்டு, இந்த சம்பவங்கள் குறித்து முறையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை, இந்த சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவுமில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இத்தகைய சம்பவங்கள் தொடரும் நிலையில், புதிதாக ஆப்ரிக்க மாணவர்களை இந்தியாவுக்கு மேற்படிப்புகளுக்காக அனுப்பவேண்டாம் என்றும் ஆப்ரிக்க அரசுகளைக் கோரவும் தாங்கள் முடிவு செய்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

மாணவர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் வரையில் ஆப்ரிக்க மாணவர்களை இந்தியாவுக்கு மேற்படிப்புகளுக்காக அனுப்பவேண்டாம் என்று அவர்கள் ஆப்ரிக்க அரசுகளைக் கோர முடிவு செய்திருக்கின்றனர்.

மேலும், ஆப்ரிக்கர்களைப் பற்றி இந்தியாவில் நிலவும் இனம் சார்ந்த காழ்ப்புணர்ச்சி, அவர்களை பொதுவாக ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தல் போன்றவைகளுக்கு எதிராக இந்தியாவில் ஊடகங்கள், சிவில் சமூகம், ஆராய்ச்சிக் கழகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் எல்லோரும் பங்காற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை அடுத்து இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் ( ஐ.சி.சி.ஆர்) வரும் வியாழனன்று நடத்தவிருக்கும் ஆப்ரிக்கா தினத்தை ஒத்திவைக்குமாறு ஆப்ரிக்கத் தூதர்கள் கோரியிருக்கிறார்கள்.லெசொத்தோ நாட்டிலிருந்து வரும் ஒரு கலைக்குழு தவிர, தாங்கள் யாரும் இந்த நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என்று, ஆப்ரிக்க தூதர்களின் குழுத் தலைவரான , எரித்ரியத் தூதர் அலெம் செஹகே வொல்டெமரியம் விடுத்த செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.