திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. மரணம்

  • 25 மே 2016

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.எம். சீனிவேல் உடல்நலக் குறைவால் காலமானார்.

படத்தின் காப்புரிமை admk.org

கடந்த மே 16ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மணிமாறனைவிட 22,992 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

கடந்த புதன் கிழமையன்று, அதாவது வாக்கு எண்ணும் தினத்திற்கு முதல் நாள் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதற்குப் பிறகு, வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றி சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமையன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.

2001-2006லும் அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு சீனிவேல் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார்.

சீனிவேலின் மரணத்தின் காரணமாக சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 134லிருந்து 133ஆகக் குறைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொள்ளவுள்ள நிலையில் சீனிவேல் மரணமடைந்துள்ளார்.