மோடி தலைமையில் இரண்டாண்டுகள் - ஒரு கண்ணோட்டம்

  • 26 மே 2016

நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், பல துறைகளிலும் இந்த அரசு தோல்வியடைந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால், நாடு முழுவதும் தங்கள் சாதனைகளைப் பட்டியலிடும் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது பா.ஜ.க.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பதவியேற்று இரண்டாண்டுகள் - சாதனையா,சோதனையா ?

2014ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் 282 இடங்களை பாரதீய ஜனதாக் கட்சி கைப்பற்றியதையடுத்து, மே 26ஆம் தேதி பிரம்மாண்டமாக நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோதி.

இரண்டாண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது, பெரிய அளவிலான ஊழல் புகார்கள் ஏதும் இல்லாதது, தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்க ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள், வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் உலகில் இந்தியா குறித்த கவனத்தை ஏற்படுத்தியது என பாரதீய ஜனதாக் கட்சி தன் சாதனைகளைப் பட்டியலிடுகிறது.

அனைவரும் வங்கிக் கணக்குகளைத் திறக்க உதவும் ஜன் தன் திட்டம், ஸ்வச் பாரத், ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் திட்டம் போன்ற திட்டங்களும் குறிப்பிடத்தக்கவை என்கிறார்கள் அவர்கள்.

ஏமன், லிபியா ஆகிய நாடுகளில் மோதல் நிகழ்ந்தபோது அங்கு வசித்த பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றியது மிக முக்கியமான நிகழ்வாக ஊடகங்களால் பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை ISNA
Image caption மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் -தாக்கத்தை ஏற்படுத்தினவா?

மோதி பிரதமராகப் பதவி வகித்த முதல் ஆண்டில் அவர் பெரிய அளவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார்.

அந்த வெளிநாட்டுப் பயணங்கள் இந்தியாவைப் பற்றிய நல்லெண்ணத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருப்பதாக ஊடக விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோதி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளைத் தங்கள் பக்கம் ஈர்த்திருக்கிறார் என்கிறார்கள் அவர்கள்.

'செயல்படாத வங்கிக் கணக்குகள்'

ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறது.

பாரதீய ஜனதாக் கட்சி எந்தெந்த விவகாரங்களில் தோல்வியடைந்தது என்பதைத் தெரிவிக்க, நாடு முழுவதும் 50 பத்திரிகையாளர் சந்திப்புகளை இன்று நடத்தியிருக்கும் கட்சி, பொதுக் கூட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

வளர்ச்சி என்ற கோஷத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. அரசு, தன்னுடைய வாக்குறுதியில் தோல்வியடைந்துவிட்டது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ஜன் தன் யோஜனா என்ற பெயரில் பெருமளவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் திட்டத்தை மோதி துவக்கிவைத்தார். ஒரே வாரத்தில் ஒரு கோடியே 80 லட்சம் வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டன. ஏழைகள் பலரும் வங்கிக் கணக்குகளைத் துவக்கவும் அதன் மூலம் பரிவர்த்தனைகளை செய்ய ஆரம்பித்தார்கள் என பாரதீய ஜனதாக் கட்சிக் கூறுகிறது.

ஆனால், இதனைத் திட்டவட்டமாக மறுக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கே.சி. முனியப்பா. இவற்றில் ஒன்றரைக்கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் செயல்படாமல் இருக்கின்றன என்கிறார் அவர்.

பிரதான் மந்த்ரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா, தீனதயாள் உபாத்யாய் க்ராமீன் வித்யுத்கரன் யோஜனா, க்ரிஷி விகாஸ் யோஜனா போன்ற பல திட்டங்கள் உண்மையில் காங்கிரஸ் கட்சியின் திட்டங்கள் என்றும் அவற்றை பெயரை மாற்றி பாரதீய ஜனதாக் கட்சி பெயர்வாங்கிக் கொள்வதாகவும் கே.சி. முனியப்பா கூறினார்.

'ஊழலற்ற ஆட்சி'

"இந்தியாவில் மிகப் பெரும் நம்பிக்கையை உருவாக்கியிருப்பதும் ஊழலில்லாத அரசை இரண்டாண்டுகளாக அளித்திருப்பதும் மிகப் பெரிய சாதனை" என பிபிசியிடம் தெரிவித்தார் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மோதி அரசு மாற்ற முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

"நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டத்தை வேண்டுமென்றே எதிர்த்தார்கள் என்பதால் அதைவிட்டுவிட்டோம்" என்கிறார் தமிழிசை.

வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வாக்குறுதியளித்த பா.ஜ.க. தன் வாக்குறுதியில் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறது என காங்கிரஸ் கூறுகிறது. பொருளாதார மந்த நிலை இருந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு 2015ஆம் ஆண்டில்தான் வேலைவாய்ப்பு மிகவும் மந்தமாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது அக்கட்சி.

இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் விவசாயம் மோதி அரசின் கீழ் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. தங்களுடைய ஆட்சிக் காலத்தில் 1250 ஹெக்டேர் நிலத்தில் நடந்துவந்த விவசாயம் தற்போது 1200 ஹெக்டேர் நிலத்தில்தான் நடப்பதாகவும் உற்பத்தியும் வெகுவாகக் குறைந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

நரேந்திர மோதி பதவியேற்ற முதல் ஆண்டில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 சதவீதம் குறைக்கப்பட்டது. இருந்தபோதும் வறட்சி பாதித்த பகுதிகளில் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பளிக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது.

விளம்பரங்களுக்கு கண்டனம்

ஆனால், ஒட்டுமொத்தமாகவே 50 நாட்கள்கூட அளிக்கப்படவில்லையென காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.

சிறுபான்மையினர் விவகாரத்தில் மோதி அரசு சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முகமது அக்லாக் என்ற இஸ்லாமியர் தன் வீட்டில் மாட்டின் மாமிசத்தை சமைத்து உண்டதாகக் கூறி, அடித்துக்கொல்லப்பட்டபோது மோதி மௌனமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

அதேபோல, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்திலும் பாரதீய ஜனதாக் கட்சியின் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

பதான்கோட், உதாம்பூர் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த தாக்குதல்களோடு ஒப்பிட்டால் மிகச் சிறியவை என்றும் புறந்தள்ளுகிறார் தமிழிசை சௌந்தரராஜன்.

பல ஆண்டுகளாக இருந்த மோசமான ஆட்சி அகன்று தற்போதுதான் நல்ல ஆட்சியை நடத்த ஆரம்பித்திருக்கிறோம். இதன் பலன் தெரிய இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும் என்கிறார் தமிழிசை.

இதற்கிடையில், இந்த இரண்டாண்டு நிறைவுக்காக பெரும் செலவில் செய்யப்பட்டிருக்கும் விளம்பரங்கள் குறித்து கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

தில்லி அரசின் பல துறைகளின் ஒட்டுமொத்த ஆண்டு செலவே 150 கோடி ரூபாய்தான்; ஆனால், ஒரே நாளில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் விளம்பரங்களுக்கு செலவழிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.