சி.வி. விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா பதில் கடிதம்

  • 28 மே 2016

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு - கிழக்கு மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ் மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து சி.வி. விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியிருக்கும் விக்னேஸ்வரன், தமது நாட்டின் தமிழ் பேசும் மக்களின் வருங்காலம் பற்றியும், உரிமைகள் பற்றியும் ஜெயலலிதா வெகுவாக சிந்தித்து, செயலாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வாழும் தமது மக்களின் குறைகளைத் தீர்க்க எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகவும், ஜெயலலிதாவைச் சந்தித்து தமது நாடுகளின் பரஸ்பர உரிமைகள், தேவைகள் குறித்து ஆராய ஆவலாக உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

போரினால் பாதிக்கப்பட்ட தங்களது பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தும் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆராய விரும்புவதாகவும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பதில் கடிதம்

விக்னேஸ்வரனின் இந்தக் கடிதத்திற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து பதில் எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

இலங்கைத் தமிழர் நலன் காக்க அவர்கள் உரிய நீதியைப் பெற தன்னால் இயன்ற நடவடிக்கைகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் எடுத்துள்ளதாகவும் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம் என்றும் ஜெயலலிதா தன் கடிதத்தில் கூறியிருக்கிறார்.