காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சி நிர்வாகிகள் அறிவிப்பு

  • 30 மே 2016

தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத்தலைவராக ராமசாமி மற்றும் கட்சியின் கொறடாவாக விஜயதாரணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

Image caption புதிய நிர்வாகிகளுடன் இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த 1989, 1991, 1996, 2001 மற்றும் 2006 என ஐந்து முறை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த உறுப்பினரான கே.ஆர்.ராமசாமி, தற்போது முதல் முறையாக காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல, அக்கட்சியின் கொறடாவாக தமிழகத்தின் விளவங்கோடு தொகுதியிலிருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ள, விஜயதாரணி தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.

ஏற்கனவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் விஜயதாரணி இடையே தனிப்பட்ட மோதல் ஏற்பட்டதால் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தன. இருவரும் தலைமையிடம் சென்று பரஸ்பரம் புகார் கூறினார்கள். அப்போது, விஜயதாரணி கட்சியை விட்டு வெளியேறுவார் என்றும் யூகங்கள் வெளிவந்தன.

இந்நிலையில் விஜயதாரணி மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு சட்டப்பேரவைக் கட்சியி்ல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தேர்வான 8 உறுப்பினர்களில் கே.ஆர்.ராமசாமி, விஜயதாரணி மற்றும் வசந்தகுமார் ஆகியோருக்கு இடையே சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பை பெறுவது யார் என்கிற போட்டி நிலவியது.