குஜராத் கலவரம்: குல்பர்க் சொசைட்டி வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகலாம்

  • 1 ஜூன் 2016

குஜராத்தில் 2002 கலவரங்களின் போது நடந்த குல்பர்க் சொசைட்டி கொலை சம்பவ வழக்கில் நாளை வியாழனன்று தீர்ப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

படத்தின் காப்புரிமை ANKUR JAIN
Image caption தாக்குதலுக்குள்ளான குல்பர்க் சொசைட்டி

இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் இது பற்றிய தீர்ப்பை நாளை அளிக்கும்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசித்த இந்தக் குடியிருப்புப் பகுதியின் மீது நடந்த தாக்குதலில் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஷான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரங்கள், 2002ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 27ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் மீது கோத்ரா என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 60 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதை அடுத்து வெடித்தன.

இந்த கோத்ரா தாக்குதலுக்கு அடுத்த நாள் குஜராத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் பரவலாக நடந்தன.

அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் சுமார் 1,500 ஹிந்துக்கள் கொண்ட கும்பல் ஒன்று நுழைந்து தாக்கியதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

Image caption 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி
'திட்டமிட்ட கிரிமினல் சதி'

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலோனோர் எஷான் ஜாஃப்ரியின் இரண்டு அடுக்கு வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள்.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் கடந்த ஆண்டு முடிவடைந்தது.

வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்காக வாதாடிய வழக்குரைஞர் எஸ்.எம்.வோஹ்ரா, இந்த சம்பவம் "முன்பே திட்டமிடப்பட்ட கிரிமினல் சதி" என்று வர்ணித்து, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையைக் கோரியிருப்பதாகத் தெரிவித்தார்.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதிட்ட வழக்குரைஞர்கள் இது முன்பே திட்டமிடப்படாத சம்பவம் என்று வாதிட்டனர்.

படத்தின் காப்புரிமை ANKUR JAIN
Image caption நீதியை எதிர்பார்க்கும் பாதிக்கப்பட்டவர்கள்

இந்தப் படுகொலையில் தனது பெற்றோர்கள் மற்றும் சகோதர,சகோதரிகளை இழந்த பிரோஸ் கான் குல்ஸார் கான் பத்தான் , இந்த வழக்கு முடிய 14 ஆண்டுகள் காத்திருக்கவேண்டிய நிலை, பொறுமையை சோதிப்பதாயிருந்தது என்றார்.

"என் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை நான் இழந்தேன். என்னையும் கத்திகளல் தாக்கியதில், நான் மோசமான காயமடைந்தேன். நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. நீதியை எதிர்பார்க்கிறோம். கடவுள் அருளால் எங்களுக்கு நீதி கிடைக்கும்" , என்றார் அவர்.

சயீத் கானின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர். " எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் , நாங்கள் மனது உடைந்து போவோம்" , என்றார் அவர்.

கடந்த ஆண்டு முடிவடைந்த இந்த விசாரணை காலகட்டத்தில், நான்கு நீதிபதிகள் மாற்றப்பட்டனர். வழக்கில் 338 சாட்சிகள் சாட்சியமளித்தனர்.

குஜராத் கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் ஒன்பது வழக்குகளை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது. அவற்றில் இந்த குல்பர்க் சொசைட்டி வழக்கும் ஒன்று.

சிறப்புப் புலனாய்வுக் குழுவால் இந்த வழக்கில் 67 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இவர்களில் நான்கு பேர் இறந்துவிட்டனர்.