தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவியேற்பு

  • 3 ஜூன் 2016

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக அ.தி.மு.கவைச் சேர்ந்த தனபால் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை
Image caption வாழ்த்திப் பேசுகிறார் ஜெயலலிதா

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு தனபாலும் துணைத் தலைவர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமனும் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்தப் பதவிகளுக்கு வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும் நிதியமைச்சரும் அவை முன்னவருமான ஓ. பன்னீர்செல்வமும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் சபாநாயகர் தனபாலை அவரது இருக்கையில் அமரவைத்தனர்.

இதற்குப் பிறகு அவரை வாழ்த்திப் பேசிய ஜெயலலிதா, தராசு முள் போல தனபால் செயல்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகத் தெரிவித்தார். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல செயல்பட வேண்டும் என்றும் தாங்கள் அதுபோல செயல்படுவோமென்றும் கூறினார்.

Image caption எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத்தில் பல கட்சிகள் இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், மக்கள் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு, ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனபாலை வாழ்த்திப் பேசிய மு.க. ஸ்டாலின், பேரவைத் தலைவர் பாகுபாடின்றி செயல்பட வேண்டுமென்றும் தாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவோமே அன்றி எதிரிக் கட்சியாக செயல்பட மாட்டோமென்றும் கூறினார்.

இதற்குப் பிறகு, சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.