தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு

  • 3 ஜூன் 2016

தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அ.தி.மு.கவிலிருந்து நான்கு பேரும் தி.மு.கவிலிருந்து இரண்டு பேரும் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை b

தமிழகத்தில் ஜூன் 29ஆம் தேதியோடு தி.மு.கவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எஸ். த ங்கவேலு, காங்கிரசைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், அ.தி.மு.கவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் பதவிக் காலம் முடிவடைகிறது.

இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 11ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது.

இதில் 4 இடங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், வைத்திலிங்கம், விஜயகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தி.மு.க. சார்பில், எஸ்.ஆர். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் 7 சுயேச்சைகளும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்கள் இல்லாத காரணத்தால் சுயேச்சைகள் ஏழு பேரின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக தமிழக சட்டப்பேரவையின் செயலர் ஜமாலுதீன் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 18 மாநிலங்களவை இடங்களில் அ.தி.மு.கவுக்கு தற்போது 12 இடங்கள் இருக்கின்றன. இப்போது நான்கு பேர் தேர்வுசெய்யப்படுவதால் அக்கட்சியின் எண்ணிக்கை 13ஆக அதிகரிக்கும்.