கூவம் ஆற்றின் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 50 பெண்கள் காயம்

  • 5 ஜூன் 2016

சென்னை தீவுத்திடலில் கூவம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 50 பெண்கள் காயமடைந்துள்ளனர்.

பெண்களுக்கான சிறப்பு மராத்தான் போட்டியில் பங்கேற்க நூற்றுக்கணக்கான பெண்கள் தீவுத்திடல் பகுதியில் இன்று காலை கூடியிருந்தனர்.

வாகனங்கள் நிறுத்துமிடப் பகுதியிலிருந்து போட்டி துவங்கும் பகுதிக்கு செல்ல அவர்கள் தற்காலிக பாலம் ஒன்றை கடந்துள்ளனர்.

அப்போது போட்டியில் பங்கேற்க வந்திருந்தவர்களிடம் பாதுகாப்பு சோதனை நடத்த முற்பட்ட போதே, அந்த ஆற்று பாலம் மீது நூற்றுகணக்கான பெண்கள் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓரே சமயத்தில் ஏராளமான பெண்கள் அந்த பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த சமயத்தில், பாலத்தின் நடுவே பிளவு ஏற்பட்டு அது சரிந்தது.

இந்த விபத்தில் கிட்டத்தட்ட 50 பெண்கள் ஆற்றிற்குள் விழுந்துள்ளனர். ஆற்றில் நீர் அதிக அளவில் ஓடாத காரணத்தாலும், சேரும் சகதியுமாகவே இருந்த காரணத்தாலும், விழுந்தவர்களுக்கு மிகப்பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் அதே சமயம் சாக்கடை போன்ற துர்நாற்றத்துடன் கூடிய அந்த ஆற்றில் விழுந்ததால், சில பெண்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அத்தோடு ஒரு சில பெண்கள் தங்களது கைப்பேசி மற்றும் நகை

ஆபரணங்களைத் தொலைத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

'அதிகாரிகள் அலட்சியம்'

இதற்கிடையே இந்த பாலத்தை அமைந்திருந்த ஒப்பந்தக்காரரான உதயகுமார் பிபிசி தமிழோசையிடம் பேசிய போது, தமிழ்நாடு சுற்றுலா பொருட்காட்சிக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட தற்காலிக பாலம் அது என்று கூறினார். மேலும் அந்த பாலம் 70 நாட்கள் மட்டுமே பயன்படுத்தும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது என்றும், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் முறைகேடுகள் காரணமாகவே இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்வதாக சென்னையை சேர்ந்த சமுக ஆர்வலரான நாராயணன் குற்றஞ்சாட்டுகிறார்.

தவிர தீவுத்திடலில் உள்ள அந்த பாலத்தைத்தான் தற்போது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சிக்கும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இன்று ஏற்பட்ட விபத்துக்கு பிறகு, வாகன நிறுத்தத்திலிருந்து, புத்தக கண்காட்சி நடைபெறும் பகுதியில் உள்ள வாயிலுக்கு சிறப்பு வாகன போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை

இந்த விபத்து நடைபெற்ற பகுதிக்கு இன்று காலையில் சென்ற தமிழக காவல்துறையினர், விபத்து நடைபெற்ற பாலம் மற்றும் அதனருகில் உள்ள மற்றொரு பாலம் ஆகியவற்றை உடனடியாக மூடியதுடன், அப்பகுதிக்கு காவல் பாதுகாப்பையும் வழங்கியுள்ளனர்.

இதே விவகாரம் குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய திருவல்லிக்கேணி பகுதியின் காவல்துறை துணை ஆணையர் பெருமாள், இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் பெறப்படாத காரணத்தால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்றார்.