விமான நிலையத்துக்குப் பிரசாதப் பையுடன் வந்த இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பற்றி சர்ச்சை

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, விமானத்தில் தன்னுடன் எடுத்துச் செல்லும் கைப் பையில் தேங்காய் உள்ளிட்ட பிரசாதப் பொருட்களை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாமல், காக்கவைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை pro

இசையமைப்பாளர் இளையராஜா தன் குடும்பத்தினருடன் கோவில்களுக்குச் சென்றுவிட்டு பிரசாதப் பொருட்களுடன் சென்னை திரும்புவதற்காக பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்தபோது, பிரசாதப் பொருட்களை அனுமதிக்க பாதுகாப்புப் பணியாளர்கள் மறுத்ததாக தனியார் தொலைக்காட்சி ஒன்று நேற்று செய்தி வெளியிட்டது.

இளையராஜாவின் கைப்பையில் இருந்த தேங்காய், விபூதி உள்ளிட்ட பொருட்களை விமானத்தில் கொண்டுசெல்ல முடியாது என பாதுகாப்புப் பணியாளர்கள் மறுத்தாலும் அவற்றை விமானத்தில் கொண்டு செல்ல வேண்டுமென இளையராஜா வலியுறுத்தினார்.

இதையடுத்து, சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்ட இளையராஜா பிறகு அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் வைகோ, இந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனையடைவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய சென்னை விமான நிலையத்தின் இயக்குனரான, தீபக் சாஸ்திரி, "நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஆனால், விமானத்தில் கைப்பையில் தேங்காய், விபூதி போன்ற பொருட்களை கொண்டுசெல்ல முடியாது. சரக்குப் பகுதிகளில் ஏற்றிச் செல்லும் பைகளில் கொண்டு செல்லலாம். அப்போதும்கூட முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.