ஜெ., சொத்து குவிப்பு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

  • 7 ஜூன் 2016

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Imran Qureshi
Image caption கோப்பு படம்

கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து, கர்நாடக அரசு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி துவங்கியது. கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு நிறுவனங்கள் தங்கள் வாதங்களை இன்று முன்வைத்தன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்திருப்பதால், நீதிபதி பி.சி. கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் வரும் 10-ஆம் தேதிக்குள் எழுத்து மூலமான தங்கள் வாதங்களை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் கூறினர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 1991 - 96 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு பொருந்தாத வகையில் 67 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்களைச் சேர்த்தார் என தொடரப்பட்ட வழக்கு கர்நாடக மாநிலத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

2014 செப்டம்பரில் இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீட்டில் ஜெயலலிதாவும் பிறரும் விடுவிக்கப்பட்டனர்.