அதிமுகவில் பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றம்

  • 8 ஜூன் 2016

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வில் பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Image caption அதிமுக-வில் நிர்வாகிகள் மாற்றம் செய்துள்ள பொதுச் செயலாளர் ஜெயலலிதா

அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தொடரும் நிலையில், பொருளாளராக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதிமுக-வின் அமைப்புச் செயலாளர்களாக ஆர். வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செழியன், எஸ். செம்மலை, என். தளவாய் சுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, ஏ.கே. செல்வராஜ், எஸ். வளர்மதி, கே. கோபால் உள்ளிட்டவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும், அந்தக் கட்சியில் செயல்பட்டு வந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு கலைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, பல மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அவர்களது பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஊடகங்களோடு தொடர்பு கொண்டு பேச முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னைய்யன், வைத்திலிங்கம், எஸ். வளர்மதி, எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், க. பாண்டியராஜன் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.