கண்டெய்னரில் 570 கோடி ரூபாய்: சி.பி.ஐக்கு நோட்டீஸ்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பாக திருப்பூர் மாவட்டத்தில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption கண்டெயினரில் பிடிபட்ட கோடிகள் -- யாருடையது என்ற மர்மம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், மே 14ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மூன்று கண்டெய்னர் லாரிகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு இந்தப் பணம் தங்களுக்குச் சொந்தமானது என கோயம்புத்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கூறியது. கோயம்புத்தூரில் இருந்து விசாகப்பட்டிணத்திற்கு பணம் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் பணம் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய அரசியல் கட்சி ஒன்றுக்குச் சொந்தமானது என சில கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன.

இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும் சிபிஐயும் விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி தி.மு.க. சார்பில் பிரதமர், சி.பி.ஐ. இயக்குனர், உள்துறை அமைச்சர், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தாங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் கோரி தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தி.மு.க. புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க வேண்டுமென சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கு இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்தார்.