இந்தியாவில் கடந்தாண்டு சாலை விபத்துக்களில் 1,46,000 பேர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்தாண்டு இந்தியாவில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்திருப்பதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக 16 பேர் போக்குவரத்தின் போது நடைபெறும் மோதல்களில் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் பாதிப் பேர், 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள்.

படத்தின் காப்புரிமை PTI

இந்த புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்ட பின் பேசிய இந்தியாவின் சாலை போக்குவரத்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, போரில் இறந்தவர்கள், ராணுவத்தில் பணியாற்றிய போது இறந்தவர்கள், நோய் தாக்கி உயிரிழந்தவர்கள் இந்த எண்ணிக்கையை காட்டிலும், சாலை விபத்துக்களில் இறந்தவர்களே அதிகம் என குறிப்பிட்டு பேசினார்.

2013ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவர அறிக்கைப்படி, உலகிலே சீனாவிலும், இந்தியாவிலும் தான் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறது.