ராஜீவ் வழக்கில் 7 பேரை விடுவிக்கக் கோரி சென்னையில் பேரணி

  • 12 ஜூன் 2016

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற பேரணி ஒன்று சென்னையில் இன்று நடைபெற்றது.

1991ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து, கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பேரறிவாளன் அதே ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையிலும் இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யக்கோரியும் இந்தப் பேரணி நடைபெற்றது.

முன்னதாக வேலூரில் துவங்கி சென்னை தலைமைச் செயலகம் வரை வாகனப் பேரணியாக நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூன்று மாவட்டங்கள் வழியாகப் பேரணி வர வேண்டும் என்பதால் காவல்துறையின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை ராஜரத்தினம் மைதானத்திலிருந்து லாங்ஸ் கார்டன் சாலை வழியாக பாந்தியன் சாலை சந்திப்புவரை ஊர்வலம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மதியம் சுமார் 2 மணியளவில் இந்த ஊர்வலம் புறப்பட்டு நான்கு மணியளவில் நிறைவடைந்தது.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் திரையுலகைச் சேர்ந்தவர்கள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. கட்சித் தலைவர்கள், இயக்குனர்கள் விக்ரமன், அமீர், ராம், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் இளமையை சிறை வாழ்க்கையிலேயே கழித்துவிட்ட நிலையில், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அற்புதமம்மாள் செய்தியாளர்களிடம் கோரினார்.

ஊர்வலம் முடிவடைந்த பிறகு அற்புதமம்மாள் உள்ளிட்ட ஐந்து பேர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் இது தொடர்பாக மனு அளித்தனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தற்போது சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் சிறையில் உள்ளனர்.