பிரிட்ஜை சரிசெய்ய சுஷ்மாவைக் கோரி வந்த ட்வீட்டுக்கு அமைச்சர் பதிலால் பரபரப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தான் மின்சார உபகரணங்களை சரி செய்ய தொடர்பு கொள்ள பொருத்தமான ஆளல்ல என்று கூறிய ட்விட்டர் செய்தி, அந்த சமூக வலை தளத்தில் தீயாகப் பரவியிருக்கிறது.
படத்தின் காப்புரிமை Twitter

பிரச்சனை இப்படி ஆரம்பித்தது.

தனது குளிர் சாதனப் பெட்டியில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதால் வெறுப்படைந்த அதன் உரிமையாளர், இது குறித்து சுஷ்மா ஸ்வராஜுடன் டிவிட்டரில் தொடர்பு கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்வராஜ், இதைவிட முக்கியமான பிரச்சனைகளில் தான் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக மென்மையாக அவருக்கு நினைவூட்டினார்.

சுஷ்மா ஸ்வராஜ் அவரிடம் உதவி கேட்டு தொடர்பு கொள்வோருக்கு அடிக்கடி பதிலளிப்பது வழக்கம்.

இந்த குளிர்சாதனப் பெட்டி உரிமையாளருக்கு அவர் அளித்த பதில் தொடர்ச்சியாக டிவிட்டரில் பல கருத்து மழைகளைத் தூண்டியது.

படத்தின் காப்புரிமை epa

ப்ரிட்ஜ் 'கூலாக' இருக்கிறதோ இல்லையோ, அமைச்சரின் பதில் 'கூலாகத்தான்' இருக்கிறது என்று ட்வீட் செய்தார் நீல் ராவ் என்ற ஒருவர்.

வெளியுறவு அமைச்சருக்கும் ப்ரிட்ஜ் ரிப்பேருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற சந்தேகத்துக்கு அஷோக் மாலிக் என்ற மற்றொரு ட்விட்டர் பயன்பாட்டாளர், " ஒரு வேளை அவர் அமைச்சர் இந்தப் பிரச்சனையை ராஜியரீதியாக தென் கொரிய அரசுடன் எடுத்துச் செல்லவேண்டும் என்று அவர் விரும்புகிறார் போல தெரிகிறது" , என்று ஜோக் அடித்தர்.

ஆனால் தனது முதல் கருத்து உருவாக்கிய இந்த ட்விட்டர் கருத்துப் புயலில் சுஷ்மா மீண்டும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.