தெலங்கானாவில் கழிவு நீர் மாதிரிகளில் போலியோ கிருமி; ‘உயர் எச்சரிக்கை’ நிலை அறிவிப்பு

தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவின் தலைநகர் ஹைதராபாதில் , கழிவு நீர் மாதிரிகளில் போலியோ கிருமி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநில அரசு ‘உயர் எச்சரிக்கை’ நிலையை அறிவித்துள்ளது.

நடத்தப்பட்ட கழிவு நீர் மாதிரிச் சோதனைகளில் இரண்டாம்-வகை போலியோ கிருமி இருப்பது கண்டறியப்பட்டதால், அடுத்த வாரம் போலியோ தடுப்பு மருந்து தரும் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று மாநிலத்தின் சுகாதாரத்துறை உயர் அதிகாரி, ராஜேஷ்வர் திவாரி புதன்கிழமையன்று கூறினார்.

ஆறு வாரத்திலிருந்து 3 வயதான 3.5 லட்சம் குழந்தைகளுக்கு இந்த ஒரு வார கால நடவடிக்கைகளில் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கைகள் திங்களன்று தொடங்கும்.

இந்தியா போலியா இல்லாத நாடு என்று 2014ம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அங்கு கழிவு நீர் மாதிரிகளில் போலியோ கிருமிக்கான சோதனை வழக்கமாக நடத்தப்படுகிறது.

அது போன்ற ஒரு சோதனையில்தான் இந்த வைரஸ் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முடமாக்கும் வியாதி பீடித்த கடைசி சம்பவம் இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் 2011ல் கண்டுபிடிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே இன்னும் போலியோ நோய் ஒழிக்கப்படாமல் இருந்து வருகிறது.