தமிழக ஆளுனர் உரை: எதிர்க்கட்சிகள் கண்டனம்

தமிழக சட்டமன்றத்தில் ஆளுனர் ரோசைய்யா இன்று ஆற்றிய உரை குறித்து தமிழக எதிர்க்கட்சிகள் ஏமாற்றத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன.

Image caption கோப்பு படம்

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, ஆளுனர் உரை அதிமுக ஆட்சியின் அம்மா திட்டங்களைப் பட்டியலிடும் உரையாக அமைந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதிமுக-வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் இந்த உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லாதது, ஏமாற்றத்தையே அளிப்பதாக கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஆளுனர் உரை என்பது ஆளும் கட்சியின் அரைகுறைத் திட்டங்களைப் பாராட்டும் உரையாக அமைந்துவிட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவருவோம் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசு அந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்த பிறகே தமிழகத்தில் அந்த சட்டம் கொண்டுவரப்படுமென அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ராமதாஸ், மத்திய அரசு சட்டத்தைத் திருத்தப் போவதுமில்லை; தமிழகத்தில் அந்தச் சட்டம் வரப்போவதுமில்லை என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், சட்டப்பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்கு வருவதற்கு ஏதுவாக வசதிகளைச் செய்துதர வேண்டுமெனக் கோரியும் அதற்கான வசதிகள் செய்துதரப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவை ஜூன் 23-ஆம் தேதி வரை நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.