ஹிஜாப் உடைக்கு விதிக்கப்பட்ட தடையால் மூடிய காஷ்மீர் பள்ளி

உள்ளூர் இந்து அறக்கட்டளையால் நடத்தப்படும் பள்ளி ஒன்றுக்குள் முஸ்லீம் பெண்கள் அபாயா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதி முழுவதுமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லீம் பெண்களால் அணியப்படும் கறுப்பு நீள அங்கி போன்ற மேலாடை அபாயா எனப்படுகிறது.

ஓர் ஆசிரியையை அபாயா அணிந்து வந்ததற்கு கோபமாக பேசியுள்ள பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி பப்ளிக் பள்ளி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“உயிரியல் ஆசிரியர் ஒருவரிடம் “வேலையா? உங்களுடைய உடையா? என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று பள்ளி முதல்வர் கோபமாக கேட்டுள்ளதால் வகுப்புகள் புறக்கணிக்கப்பட்டு, பள்ளியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி என்னுடைய குழந்தைகள் முன்னரே வந்துவிட்டனர்”, என்று இரண்டு குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்த்துள்ள சுஹையில் இக்பால் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை

காஷ்மீர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக டெல்லி பப்ளிக் பள்ளியும் இருக்கிறது.

மத விவகாரங்களில் தலையீடு என்று இதனை காஷ்மீர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

“டெல்லி பப்ளிக் பள்ளி மதசார்பற்ற மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளது. தனிப்பட்ட ஒருவர் உடை அணிவதில் யாரும் தலையிடக் கூடாது. பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு புகார் அனுப்பி இதற்கு விளக்கம் கேட்போம்”, என்று காஷ்மீர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜி.என். வார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, டெல்லி பப்ளிக் பள்ளியின் தலைவர் விஜய் தாரை தொடர்பு கொண்டபோது, தான் டெல்லியிலிருந்து தொலைவில் இருப்பதாவும், இந்த காரியத்தில் கவனம் செலுத்தயிருப்பதாகவும் கூறினார்.

காஷ்மீரை சோந்த இந்துவும், பள்ளி முதல்வருமான திருமதி குசும் வாரிக்கூ, பத்தாம் வகுப்பிற்கு உயிரியல் பாடம் கற்பிக்கின்ற ஆசிரியை பார்த்து “பணிபுரியும் நேரங்களில் பொருத்தமான ஆடை அணிந்து வர வேண்டும்” என்று சொன்னதாக பார்வையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

“என்னுடைய அபாயா மற்றும் ஹிஜாபுக்கு என்ன குறை” என்று ஆசிரியை வினவியபோது, “ஹிஜாபா அல்லது வேலையா என்பதை தெரிவு செய்வது நல்லதாக இருக்கும்” என்று பள்ளி முதல்வர் கூறியதாக அந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படாதது வன்முறையில் முடிந்ததும் இதே பள்ளியில் தான்.

“பள்ளி நிர்வாகிகள் தொழுகை நடத்துவதற்கான சுதந்திரத்தை அனுமதிக்காமல் வெள்ளிக்கிழமையை பாதி நாள் வேலை நாளாக அறிவித்தனர். இந்த உத்தரவால் கோபமடைந்த மாணவர்கள் கதவுகளின் சன்னல்களை உடைத்து வன்முறையை அரங்கேற்றினர்” என்பதை நினைவுகூர்ந்தார் சுஹையில் இக்பால்.

காஷ்மீரில் கடந்த இரண்டு தசாப்தங்களாக பெண்கள் அணிகின்ற ஆடை கோபத்தை உருவாக்கும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது.

1990-களின் தெடக்கத்தில் ஆயுதத் தாக்குதல் நடைபெற்றபோது, ஓர் உள்ளூர் பெண்கள் குழுவினர் தலையை துணியால் மூடாத பெண்கள் மேல் வண்ணநிறம் தெளித்தனர்.

எல்லா பெண்களும் நீண்ட கறுப்பு நிற ஆடையையும், தலையை மறைக்கும் துணியையும் அணிய இது வழிகோலியது.

ஆனால், பின்னர் அனைத்தும் மாறிவிட்டன. துருக்கிய மற்றும் இரானிய பெண்கள் தங்களை மூடிக்கொள்வதை போல இப்போதைய முஸ்லீம் பெண்கள் உடை அணிவதில் பின்பற்றினாலும் அவர்கள் அனைவரும் அபாயா அணிவதில்லை.

“இப்போது கட்டாயம் கிடையாது. ஆனால், பத்தில் நான்கு பேர் அவர்களின் விருப்பத்தால் அபாயா அணிகின்றனர் என்று ஒரு வணிக ஆலோசகர் அஜாஸ் அகமட் தெரிவிக்கிறார்.

காஷ்மீரின் கலாச்சார வேர்கள் சௌதி அரேபியாவின் இஸ்லாமிய மதிப்பீடுகளால் பெருமளவு பாதிக்கப்படுவதாக இந்திய ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால், மூத்த பத்திரிகையாளரான மசூட் ஹூசையின், “இது வெளிப்புற பாதிப்பு அல்ல. மக்கள் மேலும் நன்றாக, அடக்கமாக இருக்க விரும்பினால் அது அவர்களின் சுய தரிசனத்தின் தருணம்” என்கிறார்.