ரகுராம் ராஜன் பதவி நீட்டிப்பு கோரப்போவதில்லை, கல்விப்பணிக்குத் திரும்புகிறார்

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், செப்டம்பரில் தனது பதவிக்காலம் முடியும்போது, தான் பதவி விலகப்போவதாக அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

அவருக்கு பதவி நீட்டிப்பு தரப்படும என்று இந்திய அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பலத்த விவாதம் நடந்து கொண்டிருந்தது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியம் ஸ்வாமி ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு தரப்படக்கூடாது என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்திருந்தார். இந்தியப் பொருளாதாரத்தை சீரழிக்க ரகுராம் ராஜன் முயல்கிறார் என்றும் அவர் மனதளவில் ஒரு இந்தியரே அல்ல என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், இன்று சனிக்கிழமை, ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், தான் மீண்டும் தனது கல்விப் பணிக்குத் திரும்ப முடிவு செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அவருடைய இந்தக் கடிதத்தை ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தான் இந்த ஆளுநர் பதவியில் நீடிப்பதைப் பற்றி " திறந்த மனதுடன்" இருந்ததாகவும், ஆனால் இந்த முடிவை இப்போது ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகும், அரசுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பின்னரும் எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

தான் பதவி ஏற்றபோது மிகவும் பலவீனமாக இருந்த இந்தியாவின் பொருளாதார நிலையை உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக உருவாக்க உதவிய அனைவருக்கும் இந்த குறிப்பில் நன்றி தெரிவித்திருக்கும் அவர், தனக்கு அடுத்ததாக பதவி ஏற்பவர் பொருளாதார நிலையை உச்சத்திற்கு கொண்டு செல்வார் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய நாணய மதிப்பு நாளும் குறைவது, பணவீக்கம் அதிகரிப்பு, பலவீனமான வளர்ச்சி நிலவிய 2013 ஆம் ஆண்டு ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றார் என்பது குறிப்பிடதக்கது.

2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியை முன்கூட்டியே கணித்து சொன்ன ஒரு சிலரில் ஒருவரான ரகுராம் ராஜன், இந்தியப் பொருளாதாரத்தை கையாண்ட விதம் குறித்து வெகுவாகப் பாராட்டப்படுகிறார்.