கச்சத்தீவு தேவாலயப் பணிகளை தமிழக மீனவர்களுடன் ஆலோசித்தே நடத்த வேண்டும்: அ.தி.மு.க.

கச்சத் தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயப் பணிகளை தமிழக மீனவர்களுடன் கலந்தாலோசித்தே நடத்த வேண்டுமென இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கச்சத் தீவு தொடர்பாக 1974, 76ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்துசெய்ய வேண்டுமென்றும் அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம், பிரதமர் நரேந்தி மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கிய தீர்மானத்திலும் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது.

இன்று சனிக்கிழமை காலை, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

அவைத் தலைவர் மதுசூதனன்

தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், சுமார் 150 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு முதலமைச்சரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வருகை தந்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றக் இந்தக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.

இவற்றில் பெரும்பாலான தீர்மானங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டியும் நன்றி தெரிவிப்பதாகவும் இருந்தன.

மேலும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க 1520 கோடி ரூபாய், விற்பனை வரி இழப்பீட்டுத் தொகை பாக்கியான 6,352.21 கோடி ரூபாய் உட்பட மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருக்கும் நிதிகளை உடனடியாக வழங்க வேண்டுமென ஒரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டுமென்றும் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 152 அடிக்கு உயர்த்த தேவையான அனுமதிகளை மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்னக நதிகளை இணைக்க வேண்டும், கச்சத் தீவு அருகே மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமையைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

இந்த செயற்குழு கூட்டம் முடிவடைந்த பிறகு, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஜெயலலிதா அறிவுரை வழங்கியதாக அக்கட்சியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அ.தி.ம.கவின் நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டனர். புதிதாக 14 செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டதோடு, 16 மாவட்ட செயலாளர்களும் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடந்துள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து கட்சி அலுவலகம் வரும் வழிவரை அதிமுக தொண்டர்கள் கூடியிருந்தனர்.