சர்ச்சையில் சல்மான் கான் - பாலியல் வல்லுறவு , பெண்கள் குறித்த கருத்துகளால்

இந்தியாவின் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர்களில் ஒருவரான சல்மான் கான், தனது வரவிருக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அட்டவணை மிகவும் கடினமானதாக உள்ளதாகவும், அதனால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் போல் உணருவதாக செய்தியாளர்களிடம் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார்.

இந்த ஆணையை விடுத்த தேசிய மகளிர் ஆணையம், அவ்வாறு அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவருக்கு சம்மன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து சல்மான் கானின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அவரது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் நகைச்சுவைக்காக அவர் அப்படி பேசினார் என்றும், அறியாமல் தான் பேசியது குறித்து உணர்ந்து அதை திரும்பப் பெற்றுக் கொண்டார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதே நேர்காணலில் சல்மான கான் தனக்கு உள்ள சிகரெட், மது, காபி ஆகிய கெட்ட பழக்கங்களை தன்னால் விட முடியும் ஆனால் பெண் துணையை மட்டும் விடுவது கடினம் எனத் தெரிவித்துள்ளார். சல்மானின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.