கழிவறை ரசாயனத்தை குடிக்க வைத்து ராக்கிங்: ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவி

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவி ஒருவரை, ராக்கிங் என்ற பெயரில், கழிவறையை சுத்தம் செய்யும் ரசாயனத்தை் குடிக்கச் செய்த நர்ஸிங் மாணவர்கள் இருவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை AFP

இந்தக் கல்வியாண்டின் துவக்கத்தில் தனது கல்லூரிப் படிப்பைத் துவக்கினார் அந்தப் புதிய மாணவி. கழிவுறையை சுத்தம் செய்யும் ரசாயனத்தைக் குடிக்கச் செய்ததற்கான காரணம் தெரியவில்லை. அந்தப் பெண், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாகக் கூறப்படும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மாணவி, ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ராக்கிங் என்ற பெயரில், கல்லூரிக்குப் புதிதாக வரும் மாணவ, மாணவியரை கேலி செய்வதற்கு எதிராக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன..