பிரிட்டன் வாக்கெடுப்பு: 'இந்திய மென்பொருள் துறைக்கு சவால்கள்,வாய்ப்புகள்'- நாஸ்காம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று கருத்தறியும் வாக்கெடுப்பில் முடிவு வந்திருப்பது, குறுகிய காலத்தில் இந்திய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஒரு நிச்சயமற்ற காலகட்டத்தை தருவதாகவும், ஆனால் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது சவால்கள் மற்றும் வாய்ப்புகள் கலந்திருப்பதாகவும், 'நாஸ்காம்' என்று அழைக்கப்படும் இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பு முடிவின் விளைவாக பிரிட்டிஷ் நாணயமான பவுண்டின் மதிப்பு வீழ்ச்சி காணும் சாத்தியக்கூறு தற்போது நடைமுறையில் இருக்கும் பல ஒப்பந்தங்களை மீண்டும் பேசி திருத்தப்பட்டால் தவிர நஷ்டம் ஏற்படுத்தும் ஒப்பந்தங்களாக்கிவிடும் என்று நாஸ்காம் தெரிவித்திருக்கிறது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை குறித்த பேச்சுவார்த்தைகளைப் பற்றியும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் எதிர்கால உறவுகள் பற்றியும் நிலவக்கூடிய நிச்சயமற்ற நிலை பெரிய திட்டங்கள் பிரிட்டனுக்கு வருவது குறித்த முடிவுகள் எடுப்பதை தாமதப்படுத்தும் என்று அது கூறுகிறது.

இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கென்று தலைமையகங்களை நிறுவ வேண்டிய தேவை ஏற்படலாம், ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஓரளவு முதலீடுகள் வெளியேறும் நிலை ஏற்படலாம், திறன் படைத்த தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரிட்டனுக்கும் இடையே வந்து போவது பாதிக்கப்படலாம், நிதித்துறை மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம் என்று அது கூறியிருக்கிறது.

ஆனால், நீண்ட கால நோக்கில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, பிரிட்டன் ஐரோப்பிய சந்தையை அணுக அதற்கு தற்போது இருக்கின்ற சலுகை பூர்வமான உரிமைகளை இழக்கும் நிலையில், அதை சரிக்கட்ட அது இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்த வழிவகுக்கும், இதன் மூலம் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை பலப்படுத்த வழிவகுக்கும் என்றும் அது கூறுகிறது.

தற்போது 800 இந்திய நிறுவனங்கள் பிரிட்டனில் சுமார் 110,000 தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியிருக்கின்றன. எனவே இந்த உறவை பலப்படுத்துவது பிரிட்டனின் நலன்களைச் சார்ந்தது என்று அது கூறுகிறது.

நாஸ்காமின் தலைவர் ஆர்.சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில், அடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி விரைவில் தெளிவைத் தருமாறு பிரஸ்ஸல்ஸிலும், லண்டனிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்களைக் கோரியுள்ளார்.